தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கடந்த காலத்தில் கொண்டிருந்த கொள்கையிலிருந்து தற்போது விலகியுள்ளமையினால் பொதுமக்கள் தமது பிரச்சினைகள் மீது அதீத அக்கறை கொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தலைமையேற்குமாறு கோருகின்றனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவியை வமமாகாண முதலமைச்சரிடம் வழங்குமாறு மக்கள் கோரினால் அதனை ஏற்க தயார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் தெரிவித்த கருத்து தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்..
இதனால் தமது குறைபாடுகளை வெளிப்படுத்தாது வடமாகாண முதலமைச்சரை குற்றவளிக் கூண்டில் ஏற்ற முயல்வது பொருத்தமற்றதென அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை பதவிக்காக போட்டி போடும் ஒருவராக தற்போது சித்திரிக்கப்ட்டு வருவதாகவும் அவை அனைத்தும் உண்மைக்கு புறம்பான கருத்துக்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரின் தலைமையில் நடைபெறக்கூடிய விடயங்கள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன. எவ்விதமான கொள்கைகளின் அடிப்படையில் விடயங்கள் நடைபெறுகின்றன என்பதே தற்போது பிரச்சினையாக காணப்படுகின்றது.
விசேடமாக தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் எவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென்பதில் எவ்வளவுதூரம் உறுதியாகவுள்ளார்கள்.
காணிகள் விடுவிப்பு மீள்குடியேற்றம் தொடர்பாக அரசாங்கத்தரப்பினருடன் எவ்வாறு விடயங்கள் கையாளப்படுகின்றன. தற்போது எவ்வாறான முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
வரவு செலவுத்திட்டத்திற்கு எந்த அடிப்படையில் ஆதரவு வழங்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது உள்ளிட்ட பல கேள்விகள் காணப்படுகின்றன.
இதற்கு உரிய பதில்கள் கிடைக்கவில்லை. இதன் காரணத்தாலேயே கூட்டமைப்பின் தலைமை மீதும் அவர் சார்ந்து செயற்படும் ஒருசிலர் மீதும் மக்கள் விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள். என சுரேஸ் பிரேமசந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையிலேயே தமது பிரச்சினைகள் குறித்து உறுதியான நிலைப்பாட்டுடன் பேசுபவர்களுக்கு மக்கள் ஆதரவளிக்கின்றார்கள்.
வடமாகாண முதலமைச்சர் தலைமையில் இலங்கையில் நடைபெற்றது ஒரு இனப்படுகொலையே என்ற தீர்மானம் வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் அதற்கு எதிரான கருத்துக்களே கூட்டமைப்பின் தலைமையாலும் அவர் சார்ந்தவர்களாலும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வெளியிடப்பட்டன.
அதேபோன்று சர்வதேச விசாரணையை வலியுறுத்தியிருந்த போதும் அதற்கும் எதிரான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்விடயங்களில் முதலில் வைத்திருந்த கொள்கைக்கும் தற்போது கொண்டிருக்கும் கொள்கைக்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் அவர்களது எதிர்காலம் பாதுகாப்பானதாக நிரந்தர அமைதியுடன் அமையவேண்டும் என்பதற்காக, உறுதியாக இருப்பவர்களின் செயற்பாடுகளை திசைமாற்றும் வகையில் தற்போது கூட்டமைப்பின் தலைமையால் கருத்துக்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.
கூட்டமைப்பிற்குள் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு மக்கள் விடயங்களில் உறுதியான நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவதற்கு பதிலாக அவற்றை மையப்படுத்தி செயற்படும் முதலமைச்சரை குற்றவாளிக்கூண்டில் ஏற்ற முற்படுவது பொருத்தமற்றதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.