(ரி. தர்மேந்திரன்)
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்டின் பணத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் விலை போன நிலையிலேயே அரசியல் அமைப்பின் 20 ஆவது திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கி உள்ளனர், தமிழ் தேசிய கூட்டமைப்பு மொத்தமாக விலை போய் விட்டதா? என்கிற வலுவான சந்தேகமும் இருக்கவே செய்கின்றது, இருப்பினும் இக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனின் அறிக்கை சற்று ஆறுதல் தருகின்றது என்று முன்னாள் அமைச்சர் ஏ. எல். எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய கொள்கை பரப்பு செயலாளர் சட்டத்தரணி எம். எம். பஹீஜ் ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் தெரிவித்தார்.
இவருடனான நேர்காணல் வருமாறு:-
கேள்வி:- உங்கள் அரசியல் பிரவேசம் குறித்து கூறுங்கள்?
பதில்:- நான் 2002 களில் இலங்கை சட்ட கல்லூரி மாணவனாக பயின்று கொண்டிருந்தபோது அல் ஹசனாத், எங்கள் தேசம் போன்ற பத்திரிகைகளில் அரசியல் சம்பந்தமாக பத்திகள் எழுதி வந்தேன். கால ஓட்டத்தில் எங்கள் தேசம் பத்திரிகையின் செய்தி ஆசிரியராகவும் விளங்கினேன். அக்காலத்தில் சமாதான முயற்சிகள், அரசியல் அமைப்பு திருத்தத்துக்கான முன்னெடுப்புகள் ஆகியன மும்முரமாக இடம்பெற்று வந்த நிலையில் சிவில் சமூக செயற்பாட்டாளர் என்கிற வகையில் நான் அவற்றில் பங்கேற்று பங்களிப்புகளை வழங்க முடிந்தது.
இன்றைய கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தலைமையில் முன்னர் இயங்கி வந்த ஜனநாயக ஐக்கிய முன்னணியில் 2006 ஆம் ஆண்டு தேசிய பிரசார செயலாளராக இணைந்தேன். அப்போதைய உள்ளூராட்சி தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் ஜனநாயக ஐக்கிய முன்னணி போட்டியிட்டபோது சூறாவளி பிரசாரங்களை மேற்கொண்டேன்.
பிற்பாடு தனிப்பட்ட காரணங்களுக்காக சில காலம் அரசியலில் இருந்து ஒதுங்கிய நான் 2011 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தல் இடம்பெற்றபோது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அக்கரைப்பற்று மாநகர சபைக்கு போட்டியிட்டேன். ஆனால் கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை கொண்டிருந்த நிலைப்பாடுகளால் அதிருப்தி அடைந்து அடுத்த வருடமே தேசிய காங்கிரஸில் இணைந்தேன். ஆரம்பத்தில் கிழக்கு மாகாண கொள்கை பரப்பு செயலாளராகவும், 2014 ஆம் ஆண்டு முதல் தலைவர் அதாவுல்லாவின் இணைப்பு செயலாளராகவும் பதவிகள் வகித்த நான் கடந்த வருடம் இடம்பெற்ற கட்சி பேராளர் மாநாட்டில் வைத்து தேசிய கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டேன்.
கேள்வி:- அரசியல் அமைப்பின் 20 ஆவது திருத்த சட்டமூலத்துக்கு கிழக்கு மாகாண சபை ஆதரவு வழங்கியது குறித்து என்ன கூறுகின்றீர்கள்?
பதில்:- அரசியல் அமைப்பின் 20 ஆவது திருத்தம் முன்மொழியப்பட்டு, வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு உள்ளது. அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல் ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும் என்கிற பிரதான விடயத்தை இத்திருத்த ஏற்பாடு கொண்டு உள்ளது. மாகாண சபைகள் கலைக்கப்பட வேண்டிய நாளை பாராளுமன்றம் தீர்மானிக்கும் என்றும் அத்திகதி கடைசியாக உருவாக்கப்பட்ட மாகாண சபையின் உடைய பதவி கால முடிவுக்கு பிந்தியதாக இருக்க கூடாது என்றும் அவ்வாறு திகதி ஒன்று குறித்துரைக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் அத்திகதிக்கு முன்னர் முடிவடைகின்ற மாகாண சபைகளின் பதவி காலம் அந்த குறித்துரைக்கப்பட்ட திகதி வரை நீடிக்கப்பட வேண்டும் என்றும் ஏதேனும் வேறு காரணங்களுக்காக மாகாண சபைகள் எவையேனும் கலைக்கப்படுமாயின் அவற்றின் நிர்வாகம் பாராளுமன்றத்தின் கீழ் கொண்டு வரப்படும் என்றும் இதில் சொல்லப்பட்டு உள்ளது.
இச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டுமா? அல்லது இம்மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வசன வாக்கெடுப்பும் நிகழ்த்தப்பட வேண்டுமா? என்பதை தீர்மானிப்பதற்காக உயர்நீதிமன்றத்தின் முன்னிலைக்கு சென்றது.. உயர்நீதிமன்றம் அதன் தீர்மானத்தை கடந்த வியாழக்கிழமைதான் ஜனாதிபதிக்கும், சபாநாயகருக்கும் அனுப்பி வைத்து உள்ளபோதிலும் அது இன்னமும் பாராளுமன்றத்துக்கு பகிரங்கப்படுத்தப்படவே இல்லை.
அரசியல் அமைப்பு சட்ட ஏற்பாடுகளின்படி மாகாண சபைகள் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக சட்டங்கள் உருவாக்கப்படுகின்றபோது மாகாண சபைகளின் அபிப்பிராயத்தை ஜனாதிபதி கேட்டறிதல் வேண்டும். இந்நிலையில் அரசியல் அமைப்பின் 20 ஆவது திருத்த சட்டமூலம் குறித்து கிழக்கு மாகாண சபையின் கருத்து கேட்கப்பட்டு இருந்ததாக சொல்லப்படுகின்றது. அதற்கு அமையவே கடந்த 11 ஆம் திகதி கிழக்கு மாகாண சபை இச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தது. இச்சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்துக்கு சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்டு இருந்த திருத்த யோசனைகளை அடிப்படையாக வைத்தே ஆதரவு வழங்கினர் என்று கூறுகின்றனர்.
எது எவ்வாறாயினும் மாகாண சபைகளின் ஆட்சி காலம் நீடிக்கப்படுவது ஜனநாயக விரோத நடவடிக்கை ஆகும். பாராளுமன்றத்தின் ஆட்சி காலத்தையாயினும் சரி, ஜனாதிபதியின் பதவி காலத்தையாயினும் சரி நீடிக்க வேண்டுமாயின் சர்வசன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டி உள்ளது. ஆனால் உள்ளூராட்சி சபைகளின் காலத்தை நீடிக்க சர்வசன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. 04 வருடங்கள் கொண்ட ஒரு பதவி காலத்துக்கென மக்கள் வாக்களிக்க நேர்ந்தாலும் இச்சபைகளின் காலம் உள்ளூராட்சி விவகாரங்களுக்கான அமைச்சரால் நீடிக்கப்படலாம் என்று தெரிந்து வைத்து கொண்டே வாக்களிக்கின்றனர். இப்பின்னணிகளில் பார்க்கின்றபோது அரசியல் அமைப்பு மூலம் மாகாண சபைகளுக்கான ஒரு பதவி காலம் 05 வருடங்களுக்கென மட்டுப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் இக்கால எல்லையை மேலும் நீடிப்பதாயின் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டேயாதல் வேண்டும். அவ்வாறு இல்லாமல் வேறு விதங்களில் கிழக்கு மாகாண சபையின் பதவி காலம் நீடிக்கப்படுமாயின் அது கிழக்கு மக்களின் இறைமையையும், அந்த இறைமையில் இருந்து எழுகின்ற வாக்குரிமையையும் பாதிக்கின்ற செயலே ஆகும்.
2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற மாகாண சபை தேர்தலில் கிழக்கு மாகாண மக்கள் பெரும்பான்மை ஆதரவை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு வழங்கி இருந்தனர். அதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் சேர்ந்து ஆட்சி அமைத்தன. ஆனால் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஜனாதிபதியின் ஆணையை காட்டி கிழக்கு மாகாண மக்களின் ஆணை புறம் தள்ளப்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை புறம் தள்ளி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றின் கூட்டாட்சி உருவாக்கப்பட்டது. இக்கூட்டாட்சி கிழக்கு மாகாண மக்களால் தேர்தலில் வழங்கப்பட்ட ஆணைக்கு முற்றிலும் எதிரானது ஆகும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு மத்திய அரசாங்கம் இணங்க வேண்டும் என்கிற முன்நிபந்தனையுடன்தான் 20 ஆவது திருத்த சட்டமூலத்துக்கு கிழக்கு மாகாண சபை ஆதரவு வழங்கி உள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் இப்போது தெரிவித்து உள்ளார். இது கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களையும், பாரிய அச்சங்களையும் தோற்றுவித்து உள்ளது. அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகளின் நிகழ்ச்சி நிரல்கள் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஐ. நா மனித உரிமைகள் பேரவை போன்றவற்றின் ஊடாக இலங்கை மீது திணிக்கப்பட்டு வருகிற நிலையில் இந்நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாங்கப்பட்டோரான ரணில் – சம்பந்தன் – ஹக்கீம் – சுமந்திரன் கூட்டு கிழக்கு மாகாண மக்களின் அபிப்பிராயத்தை கேட்டறியாது கிழக்கை வடக்குடன் இணைக்கின்ற முயற்சியில் ஈடுபட்டு உள்ளது தெளிவாகியுள்ளது. கிழக்கில் பெரும்பான்மையாக வாழ்கின்ற முஸ்லிம் மக்களும், இங்கு முதலாவது சிறுபான்மையாக வாழ்கின்ற தமிழ் மக்களில் பெரும்பான்மையானோர் மட்டும் அன்றி இரண்டாவது சிறுபான்மையாக வாழ்கின்ற சிங்கள மக்களும் வடக்கு, கிழக்கு இணைவதை விரும்பவே இல்லை, இவ்விணைப்பை அனுமதிக்க போவதும் இல்லை. வடக்கு, கிழக்கை இணைக்கின்ற எண்ணம் அரசாங்கத்துக்கு இருக்குமானால் அது தொடர்பாக மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது கட்டாயம் ஆகும்.
கேள்வி:- உங்கள் தலைவர் அதாவுல்லாவை சில தினங்களுக்கு முன்னர் விசேட ஹெலியில் கொழும்புக்கு ஜனாதிபதி அழைப்பித்த மர்மம் என்ன?
பதில்:- ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முக்கிய பங்காளி கட்சிகளில் ஒன்றாக தேசிய காங்கிரஸ் விளங்குகின்றது. அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நிறைவேற்று குழுவிலும் அங்கம் வகிக்கின்றது. இதே நேரம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதான பங்காளி கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி காணப்படுகிறது. இவ்வடிப்படையில் தேசிய காங்கிரஸுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் மிக நெருக்கமான தொடர்புகள் நிலவி வருகின்றன. இந்நிலையில்தான் சுதந்திர கட்சியின் 63 ஆவது ஆண்டு நிறைவு மாநாடு கடந்த 03 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற வேளை வேறு முக்கியமான நிகழ்ச்சியில் எமது தலைவர் அதாவுல்லா அக்கரைப்பற்றில் அன்றைய தினம் அவசியம் பங்கேற்க நேர்ந்தது. ஆனால் சுதந்திர கட்சியின் மாநாட்டில் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா பங்கேற்றே ஆக வேண்டும் என்று பெரிதும் விரும்பிய சுதந்திர கட்சி தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உலங்கு வானூர்தி ஒன்றை ஏற்பாடு செய்து அனுப்பி, தலைவரை அக்கரைப்பற்றில் நடந்த நிகழ்ச்சி முடிந்த கையோடு கொழும்புக்கு எடுத்தார். இது தேசிய காங்கிரஸ் தலைவர் மீது அரச தலைவர் வைத்திருக்கின்ற நம்பிக்கையை, நல்லெண்ணத்தை, புரிதலை படம் பிடித்து காட்டுகின்றது.
கேள்வி:- நல்லாட்சி அரசாங்கத்தின் தற்போதைய நிலை குறித்த உங்கள் அவதானம் என்ன?
பதில்:- இந்நாட்டில் நல்லாட்சி நடக்கவே இல்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பொல்லாத ஆட்சியேதான் நடக்கின்றது. நல்லாட்சிக்கு மக்கள் வாக்களித்து இருந்தனர். ஆனால் மக்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழவே இல்லை. முஸ்லிம் மக்களுக்கு வாக்களித்து இருந்தபடி ஞானசார தேரர் நாய்க் கூண்டில் அடைக்கப்படவில்லை, பொதுபலசேனா முடக்கப்படவில்லை. அளுத்கம கலவரத்தின் சூத்திரதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. தம்புள்ளை பள்ளிவாசல் காணி பிரச்சினை தீர்க்கப்படவில்லை, கிராண்பாஸ் பள்ளிவாசல் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் நிறைவேற்றப்படவில்லை. வில்பத்து காணி பிரச்சினை முடிவடையவில்லை. பொதுவாக நாடு பூராக குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் விவசாய காணிகள் விடுவிக்கப்படவில்லை. அம்பாறையை பொறுத்த வரை வட்டமடு காணி பிரச்சினை, நுரைச்சோலை வீட்டு திட்ட பிரச்சினை, கரும்பு வியாபாரிகளின் பிரச்சினை, மாயக்கல்லிமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட பிரச்சினை போன்றவற்றுக்கு இன்னமும் தீர்வு இல்லை என்பதுடன் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபை வழங்கப்படவில்லை, கல்முனை நகர அபிவிருத்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பனவும் சுட்டிக் காட்டப்பட வேண்டிய கூடிய விடயங்கள் ஆகும்.
மக்கள் மீது வரிச் சுமை சுமத்தப்பட்டு உள்ளது. புதிதாக கொண்டு வரப்பட்டு உள்ள உள்நாட்டு இறைவரி சட்டம் மக்கள் மீது திணிக்கப்பட்ட பாரிய வரிச் சுமை ஆகும். பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. தனியார் மருத்துவ கல்லூரி பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படவில்லை. வேலையில்லா பிரச்சினை தீர்க்கப்படவும் இல்லை, வேலையற்ற பட்டதாரிகளுக்கு கணிசமான வேலை வாய்ப்புகள் வழங்கப்படவும் இல்லை. ஊனமுற்ற படை வீரர்கள் போராட்டம் செய்கின்றார்கள். பெற்றோலிய கூட்டுத்தாபனம், மின்சார சபை, துறைமுக அபிவிருத்தி அதிகார சபை, வைத்தியசாலை போன்றவற்றின் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டங்களில் மாறி மாறி ஈடுபடுவதை காண முடிகின்றது. மொத்தத்தில் மக்கள் சந்தோசமாக இல்லை. அதே போல அரசாங்கம் தேர்தல்களை நடத்த அஞ்சுகின்றது. தேர்தல்கள் நடத்தப்பட்டு மக்களின் வாக்களிக்கும் உரிமை உறுதிப்படுத்தப்படுவது உண்மையான நல்லாட்சியின் அம்சங்களில் முக்கியமான ஒன்றாகும்.
கேள்வி:- பிரசித்தி வாய்ந்த இந்திய பத்திரிகை ஒன்று மேற்கொண்ட ஆய்வின்படி இலங்கையின் மிக பிரமாண்ட கோடீஸ்வர முஸ்லிம் அரசியல்வாதியாக உங்கள் தலைவர் அதாவுல்லா பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளாரே?
பதில்:- எந்த அடிப்படையில் அந்த பத்திரிகை ஆய்வு நடத்தியது? என்பது எமக்கு தெரியாது. எமது தலைவர்தான் இலங்கையின் பிரமாண்ட கோடீஸ்வர முஸ்லிம் அரசியல்வாதி என்கிற முடிவுக்கு அப்பத்திரிகையை இட்டு சென்ற அதாரம் என்ன? என்பதும் எமக்கு புரியவில்லை. ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியூதீன், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் ஆகியோர் இருக்கும்படியாக எமது தலைவரை இவ்விதம் கோடீஸ்வர அரசியல்வாதியாக பெயர் குறிப்பிட்டு இருப்பதற்கு பின்னால் ஒரு சதி திட்டம் நிச்சயம் இருப்பதாகவே மக்கள் ஐயம் கொண்டு உள்ளனர். மக்களின் ரொக்க பணத்தை கொள்ளை அடித்ததாகவும், பாரிய இலஞ்ச ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டு அரசியல்வாதிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் பலர் மீதும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிற சூழலில் எமது தலைவருக்கு பொறி வைக்க முயற்சிக்கின்றனர் என்பது விளங்குகின்றது. உண்மையில் வேறு ஒருவர்தான் இலங்கையின் மிக பிரமாண்ட கோடீஸ்வர முஸ்லிம் அரசியல்வாதியாக அடையாளம் காட்டப்பட்ட நிலையில் அந்த அரசியல்வாதியின் பெயர் அழிக்கப்பட்டு, எமது தலைவரின் பெயர் சேர்க்கப்பட்டு இருப்பதாக நாம் நம்புகின்றோம். எது எப்படி இருந்தாலும் இதை நாம் ஒரு வேடிக்கை, விநோத நிகழ்வாகவே எடுத்து உள்ளோம்.
கேள்வி:- முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு என்கிற கட்டமைப்பில் தேசிய காங்கிரஸ் இணைந்து செயற்படுமா?
பதில்:- முஸ்லிம் கட்சிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் உள்ள தொடர்புகளை வைத்து கொண்டு ஏதேனும் கூட்டமைப்பை உருவாக்குகின்ற முயற்சியில் ஈடுபடுமாக இருந்தால் தேசிய காங்கிரஸ் சாதகமாக அதை பரிசீலிக்காது. ஆனால் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தீர்வு, அதிகாரம், காணி பிரச்சினை, வாழ்வாதார பிரச்சினை போன்ற விடயங்கள் தொடர்பாக பொது முடிவை அடைய இணங்கி செயற்படுவது குறித்து சாதகமாக பரிசீலிக்கும். தேர்தல் வருகின்றபோதுதான் தேர்தல் கூட்டு குறித்து தீர்மானிக்க முடியும். எமது சமூகத்தின் விருப்பம், தேவை ஆகியவற்றை அடிப்படையாக வைத்தே தீர்மானங்களை கட்சி எடுக்கும்.
கேள்வி:- உங்கள் கட்சிக்கான மக்கள் ஆதரவு என்ன நிலையில் உள்ளது?
பதில்:- கடந்த ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல் ஆகியவற்றின்போது தேசிய காங்கிரஸ் சொல்லிய விடயங்கள் நிதர்சனமாகி வருவதை மக்கள் கண்கூடாக பார்க்கின்றார்கள். தேசிய காங்கிரஸ் உணர்ச்சிகளுக்கு பின்னால் செல்லாமல் தேசிய, சர்வதேசிய நிகழ்ச்சி நிரல்களை புரிந்து கொண்டு, முஸ்லிம் மக்கள் எடுத்திருக்க வேண்டிய நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி இருந்த நிலையில் அது சரியானது என்று மக்கள் இப்போது உணர்கின்றார்கள். தேசிய காங்கிரஸின் பணிகளை விஸ்தரிக்க வேண்டும் என்று எல்லா பிரதேசங்களில் இருந்தும் எமக்கு அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
முஸ்லிம் மக்கள் கிழக்கில் ஏமாற்றப்படுவதை உணர்ந்தே தேசிய காங்கிரஸ் கிழக்கில் அதன் பணிகளை முன்னெடுத்தது. ஆனால் வடக்கு முஸ்லிம்கள் அவர்களும் ஏமாற்றப்படுவதாக முறையிட்டு, எமது கட்சி அவர்களுடனும் பயணிக்க வேண்டும் என்று கண்டிப்பாக கோரியமைக்கு அமையவே வடக்கிலும் எமது கட்சி பணிகளை விஸ்தரித்து உள்ளோம்.