முதல்வர் விக்னேஸ்வரனை சந்திக்க வினயாமான வேண்டுகோள்!!!

அதிகார பகிர்வு சம்மந்தமாக சுவிற்சலாந்து, தென்னாபிரிக்க பிரதிநிதிகளுக்கும் வட மாகாணசபை உறுப்பினர்களுக்குமிடையேயான கலந்துரையாடல் நேற்று 18-01-2016 இடம்பெற்றது. இதன்போது அமர்வு முடிவின் பின்னர் தமக்குள் ஒரு சந்திப்பை ஏற்படுத்தி சில விடயங்களை முடிவெடுக்க அனைத்து உறுப்பினர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன் பிரகாரம் பேரவை தலைவர் அமைச்சர்கள் உட்பட ஆளும் தரப்பு உறுப்பினர்கள் ஒன்றுகூடி கலந்தாலோசித்த பின் கௌரவ முதலமைச்சருக்கு ஒரு வினயமான வேண்டுகோள் கடிதம் அனுப்பியுள்ளனர்.


கௌரவ முதல்வர் அவர்களே!

வினைத்திறன் உள்ள மாகாண நிர்வாகம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயல்படல் என்ற இரண்டு பிரதான விடயங்களின் அடிப்படையில் கடந்த 2015 நவம்பர் மாதம் 11 ம் திகதி தங்களுடன் வடக்கு மாகாண சபையின் ஆளும்தரப்பு உறுப்பினர்கள் கலந்துரையாடல்களை நடாத்தியிருந்தனர். இறுதியாக இடம்பெற்ற 11-01-2016 திகதிய சந்திப்பில் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துகளுக்கு தாங்கள் பதில் கூறும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு 17-01-2016 அன்று விசேட சந்திப்பொன்றிற்கு ஏற்பாடுசெய்திருந்தீர்கள்.

அந்த சந்திப்பில் கௌரவ பேரவை தலைவர் மற்றும் கௌரவ அமைச்சர்களை இணைத்து கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இருப்பினும் அன்றைய சந்திப்பு தங்களுடைய தனிப்பட்ட காரணங்களின் நிமித்தம் பிற்போடப்பட்டது என்று எமக்கு தங்களின் பிரத்தியேக செயலாளரால் அறிவிக்கப்பட்டது. இன்னிலையில் கௌரவ பேரவை தலைவர் கௌரவ அமைச்சர்கள் உட்பட கௌரவ உறுப்பினர்கள் அனைவரும் குறித்த சந்திப்பானது மிகவும் அவசரமாக இடம்பெற வேண்டும் என்ற கருத்தை கொண்டுள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து மிக நீண்டகாலமாக செயல்பட்டு வருகின்றது. தமிழ் மக்களின் ஏகோபித்த அங்கீகாரத்தை பெற்ற அரசியல் கட்சி என்ற வகையில் இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட இருக்கின்ற புதிய அரசியல் திருத்த யோசனை விடையத்தில் மிகவும் பொறுப்புணர்வோடு செயற்பட கடமைப்பட்டிருக்கின்றது. அந்த வகையில் வடக்கு மாகாணத்தின் ஆளும் தரப்பாகிய நாம் அதிகார பகிர்வு விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு காத்திரமான பங்களிப்பை வழங்கவேண்டிய பிரதான நிலையில் இருக்கின்றோம்.

இதற்காக விசேட செயலணி ஒன்றை வடக்கு மாகாணசபையில் ஏற்படுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது. எனவே பின்வரும் விடயங்கள் குறித்து தங்களோடு கலந்துரையாடுவது சிறப்பானது என்பது எமது எதிர்பார்ப்பாகும்

* வினைத்திறன் உள்ள மாகாணசபை செயன்முறை

* தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயல்படல்

* அதிகார பகிர்வு விடயத்தில் வடக்கு மாகாண சபையின் பங்குபற்றுதல்

போன்ற விடயங்களே கருத்தாடலுக்கு எடுத்துக்கொள்ளப்படவிருக்கின்றன. எனவே மேற்படி அவசர சந்திப்புக்கு எதிர்வரும் 2016 ஜனவரி 20 திகதி நேரம் ஒதுக்கி தருமாறு தயவாக வேண்டுகிறோம்

இவ்வண்ணம்

கௌரவ பேரவைதலைவர்

கௌரவ அமைச்சர்கள்

கௌரவ உறுப்பினர்கள்

[ மாகாண சபை பேரவை தலைவர் அமைச்சர்கள் உறுப்பினர்கள் இவ்வாறு தங்கள் முதல்வரை சந்திக்க ஒன்றுகூடல் நடத்தி வினையமான வேண்டுகோள் கடிதம் அனுப்பிய அதே தினத்தில் கௌரவ மாகாணசபை முதல்வர் முன்நாள் நீதியரசர் விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் யாழ்ப்பாணம் றக்கா லேனில் நடந்த தமிழ் மக்கள் பேரவை கூட்டத்தில் கஜேந்திரகுமார் சுரேஸ் பிரேமசந்திரன் உட்பட எனையவர்களுடன் காலையில் தொடங்கி மாலைவரை நடைபெற்ற கூட்டத்தில் கலந்து சிறப்பித்தார்.]