முன்னாள் வடமாகாண முதலமைச்சரை நான் எப்போதோ நிராகரித்து விட்டேன். அவருடன் கூட்டுச் சேரும் நோக்கம் எப்போதும் இல்லை என மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, இந்து சமய காலாச்சாரம் மற்றும் வடக்கின் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்ற முன்னாள் முதலமைச்சர், ஈபிடிபியை இணைத்துக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளாரே என ஊடகவியலாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கேள்வி எழுப்பிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வவுனியாவில் அமைந்துள்ள உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் சுற்றுலா விடுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
நான் முன்னாள் முதலமைச்சருக்கு பின்னாலோ முன்னாலோ சென்று எனக்கும் சந்தர்ப்பம் தாருங்கள் என்று கேட்கவில்லை. நான் எப்பொழுதோ அவரை நிராகரித்து விட்டேன். நான் மற்றவர்களை போல் அவரிடம் கேட்டுக்கொண்டிருந்தால் அவர் சொல்வதில் நியாயம் இருக்கும். ஆனால் அவரிடம் எப்போதும் நியாயம் இருப்பதாக தெரியவில்லை, மேலும் அவரிடம் கூட்டுச்சேரும் நோக்கம் எப்போதும் இல்லை. இது தொடர்பாக என்ன கற்பனையில் இதை சொன்னார் என்று அவரிடம்தான் கேட்க வேண்டும்.
நான் எப்போதும் ஆட்சியில் இருப்பவர்களை விமர்சித்தது கிடையாது. ஆட்சியாளர்கள் ஆட்சியாளர்களாகத்தான் இருப்பார்கள். ‘கரைக்கின்றவன் கரைத்தால் கல்லும் கரையும்’ என்பது போல நாங்கள்தான் அந்த ஆட்சியை சரியாக கொண்டு நடத்த வேண்டும்.