ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை புதுப்பித்து, மீண்டும் கைக்கோர்த்து, ஆட்சியைக் கொண்டுசெல்வோம் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.ரணில் விக்ரமசிங்க தலைமைத்தாங்கும் ஐக்கிய தேசியக் கட்சியுடன், மீண்டும் கூட்டணி சேரப்போவதில்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறி வரும் நிலையில், இன்று (15) அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி – ரணில் விக்கிரமசிங்கவுக்கிடையில் இனிமேல் கூட்டணி கிடையாது என்ற விடயம் பொய்யாவிட்டது என்று கூறியுள்ள அவர், இந்தக் கூட்டணி, இனி தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சூழ்ச்சிக்காரர்களின் பணத்துக்கு, தங்களது உறுப்பினர்கள் அடிபணியவில்லை என்றும் ஒந்தவொரு ஒப்பந்தங்களையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்றும் கூறிய அவர், மக்களுடன், சமூக ரீதியில் மாத்திரமே ஒப்பந்தங்களைச் செய்துகொண்ட நாம், அதை நிறைவேற்றுவதற்கு மாத்திரமே பாடுபடுவோம் என்றும் கூறினார்.
நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை தங்களாலேயே, உறுதிப்படுத்தியதாகக் கூறிய அவர், நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று யாரும் கூற முடியாது என்றும் தெரிவித்தார்.
மக்கள் தெரிவில் வந்தவர்கள் நாடாளுமன்றத்தில் நடந்துகொண்ட விதத்தை மக்கள் அனைவருமே கண்டார்கள் என்று கூறிய அவர், சபாநாயகரை தாக்கி, மைக்ரோ போனை உடைத்து, மிளகாய் தூள் வீசி, பாதுகாப்பு தரப்பையும் தாக்கி அநியாயம் செய்தவர்களுக்கு, பாதுகாப்பபுத் தரப்பினரின் உரிமை பற்றிப் பேசுவதற்கு, எந்தவொரு அருகதையும் கிடையாது என்றும் விடுதலைப் புலிகளின் அச்சறுத்தலின் பின்னர், எமது பாதுகாப்புத் தரப்பினர் எதிர்கொண்ட பாரிய அச்சுறுத்தல் இது என்றும் அதற்கெதிராகவே மக்கள் அனைவரும் எம்முடன் கைகோர்த்தனர்.
மேலும், அரசமைப்பை எட்டி உதைத்து, எதையும் சாதிக்க முடியாது என்பது நிரூபணமாகியுள்ளது என்றும் புதிய தேசம், அபிவிருத்தி, சுபீட்சம் நிறைந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்றும் அவர் கூறினார்.