“நாங்கள், மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்குக் குரல் கொடுத்து வருகிறோம். அண்மையில், முள்ளிக்குளம் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. தமது நிலங்களை விடுவிக்கக்கோரி, அந்த மக்கள் நீண்ட காலமாக போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். அந்த மக்களுக்கு ஆதரவாக மாவட்டத்தில் பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வந்தனர். இந்த நிலையிலே, அந்த மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன” என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
மன்னார் நகர சபைப் பிரிவுக்குட்பட்ட கீரிக் கடற்கரை பகுதியில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட ‘கீரி சுற்றுலா கடற்கரை’ நேற்றுக் காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்வில் விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பூ மலந்தான் கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள், தமது பல்வேறு பிரச்சினைகளை என்னிடம் தெரிவித்தனர். தாங்கள் குறித்த கிராமத்தில் குடியமர்ந்து சுமார் 40 வருட காலங்களைக் கடந்துள்ள நிலையில், இதுவரை தமது காணிக்கான அனுமதிப்பத்திரங்கள் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தனர்.
தாம் குடியமர்ந்துள்ள காணிக்கான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளுவதற்காக மடு பிரதேச செயலாளரிடமும், மேலும் பலரிடமும் பல தடவைகள் சென்ற போதும் தமது காணிக்கான அனுமதிப்பத்திரத்தை தர, பெற்றுத்தர மறுக்கின்றனர்.
அந்தக் காணிகள், மன்னார் ஆயர் இல்லத்துக்குச் சொந்தமான காணியாகக் காணப்படுகிறது. மக்கள் இருக்கின்ற காலம் வரைக்கும் இருங்கள். ஆனால், குறித்த காணிக்கான அனுமதிப்பத்திரத்தை வழங்க முடியாது என அதிகாரிகள் கூறியுள்ளதாக அந்த மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளனர். நான் குறித்த விடயம் தொடர்பில் முக்கியமானவர்களுடன் கலந்துரையாடியுள்ளேன்” என்றார்.