தேசிய பாதுகாப்பு கருதி வட்டுவாகல், முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் கடற்படை முகாம் அமைக்கவுள்ளதாகவும் காணிகளை இழப்பவர்களுக்கு சிறந்த நஷ்டஈடு வழங்கப்படுமெனவும் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி. வசந்த பெரேரா தெரிவித்துள்ளார். எனினும் காணி உரிமையாளர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இக் கூட்டத்தில் கலந்து கொண்ட காணியுரிமையாளர்கள் மூன்று தலைமுறையாக மேற்படி காணியில் வாழ்ந்துவருகின்றோம். 617 ஏக்கரில் 150 ஏக்கர் வயல் நிலமும் 276 ஏக்கர் அரச காணியும் காணப்படுகின்றது. எங்களுடைய காணிகளை கடற்படையினரின் முகாம் அமைப்பதற்கு விட்டுக்கொடுக்க முடியாதென தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வருகை தந்திருந்த வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான சி.சிவமோகன், வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோருடன் ஊடகவியலாளர்களும் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் காணி உரிமையாளர் என்ற வகையில் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அவர், 30 ஆண்டுகளாக போரினால் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள முல்லைத்தீவின் வட்டுவாகல் முள்ளிவாய்க்கால் கிழக்கு மக்களின் காணிகளை நல்லாட்சிக் காலத்தில் சுவீகரிக்க முயல்வது ஜனநாயக விரோத போக்கெனவும் காணிக்கான ஆவணங்கள் போரினால் பலபேரிடம் இல்லையெனவும் தெரிவித்தார்.
இதன் போது கருத்துத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், காணி சுவீகரிப்பதென்பது இறுதி முடிவல்ல. காணிக்குரிய ஆவணங்கள் உள்ளவர்கள் பத்து நாட்களுக்குள் கரைதுறைபற்று பிரதேச செயலரிடம் பதிவுகளை மேற்கொள்ளமுடியும். ஆவணங்களை இழந்தவர்கள் ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் காணிக்குரிய ஆவணங்களை பிரதேச செயலரிடம் ஒப்படையுங்கள். பெப்ரவரி முதல் வாரத்தில் நாம் முல்லைத்தீவுக்கு வருகைதந்து முடிவுகள் எடுப்போம் எனவும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், வட்டுவாகல் முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியின் காணி உரிமையாளர்களும் கடற்படை அதிகாரிகளும் முல்லைத்தீவு மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரன், கரைதுறைபற்று பிரதேச செயலர் எஸ்.திரேஸ்குமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.