சம்பந்தன் ஐயாவும் கண்டுகொள்வதில்லை
ஜெனீவா உள்ளிட்ட சர்வதேசத்துக்குச் சென்று தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், அதே தமிழ் மொழியைப் பேசும் வடபகுதி முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் வாய்திறப்பதில்லையென வாணிப மற்றும் கைத்தொழில்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
புலிகளால் வெளியேற்றப்பட்ட வடபகுதி மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறச் செல்லும்போது ‘புத்தளத்து முஸ்லிம் களுக்கு இடமில்லை’ எனக் கூறி அவர்களின் மீள்குடியேற்றத்தைத் தடுக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களும், மதவாதிகளும் நடந்துகொள்வதாக அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.
ஜெனீவா பிரேரணை தொடர்பில் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் ஐயா தெரிவுசெய்யப்பட்டதும் நாம் மகிழ்ச்சிய டைந்தோம்.
ஆனால் எதிர்க்கட்சித் தலைவரோ அல்லது பாராளுமன்றத்தில் உள்ள 16 கூட்டமைப்பு உறுப்பினர்களோ வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு இலட்சம் முஸ்லிம்களின் மீள்குடி யேற்றம் பற்றி எதுவும் பேசுவதில்லை.
தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக ஜெனீவாவுக்குச் சென்றும், இந்தியாவுக்குச் சென்றும் பேசும் சந்பந்தன் ஐயா, முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பற்றியோ புலிகளால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் பற்றியோ எதுவும் சொல்வதில்லை.
பல வருடங்களாக புத்தளத்தில் அகதிமுகாம்களில் அடங்கியிருக்கும் முஸ்லிம்கள் தமது சொந்த இடங்களுக்குச் சென்று மீள்குடியேற முயற்சிக்கும்போது வடமாகாணத்தில் உள்ள கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களும் கூட்டமைப்பின் அரசியல் பிரமுகர்களும் மிகவும் அநாகரீகமான முறையில் நடந்துகொள்கின்றனர். இதனால் பலர் மீள்குடியேறாது திரும்பியுள்ளனர்.
சர்வதேசப் பொறிமுறை மற்றும் விசாரணைகள் குறித்துப் பேசப்படுகிறது. இந்த விசாரணைகள் 2007ஆம் ஆண்டின் பின்னர் இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் பாதிப்பக்கள் பற்றி மாத்திரமே ஆராயப்படப்போகிறது. ஆனால் 1985ஆம் ஆண்டுக்குப் பின்னர் முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் குறிப்பாக புலிகளால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்படவேண்டும்.
இதுவிடயத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் கவனம் செலுத்தி இதற்கான பொறிமுறையொன்றை ஏற்படுத்த வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை உடனடியாக நிறை வேற்றும் இந்த அரசாங்கம், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்காமை மிகவும் கவலையளிக்கிறது. மீள்குடியேற்ற அமைச்சராக டி.எம்.சுவாமிநாதன் பதவியேற்று பத்து மாதங்கள் ஆகியுள்ளபோதும் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களுக்கு ஒரு மலசலகூடத்தைக் கூடக் கட்டிக்கொடுக்கவில்லையென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மட்டக்களப்பு, பொலனறுவை உட்பட நாட்டின் பல பகுதிகளில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். ஏனைய இனத்துக்கு எந்தவிதத்திலும் குறையாத இழப்புக்களை முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ளது. எமது சமூகத்துக்கு ஏற்பட்டிருக்கும் இழப்புக்கள் குறித்து பாராமுகமாக இருக்கின்றனர்.
குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சக தமிழ்மொழிபேசும் சமூகமான முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் பற்றி பேசுவதில்லை.
வடபகுதியில் இடம்பெயர்ந்த ஒரு இலட்சம் முஸ்லிம் மக்களையும் மீள்குடியேற்றவேண்டிய தார்மீக பொறுப்பு, இரா.சம்பந்தனுக்கும், மாவை சேனாதிராஜாவுக்கும், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இருப்பதாக அமைச்சர் ரிசாட் பதியுதீன் மேலும் தெரிவித்தார்.