– அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அஸ்மி பெருமிதம்
அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு சரியான அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளதையே நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் முடிவுகள் காட்டுகின்றன, அவர்களுக்கு வழிகாட்டுகின்ற மிக பொருத்தமான தலைமையாக முன்னாள் அமைச்சர் ஏ. எல். எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸை அடையாளம் கண்டு ஏற்று அங்கீகரித்து உள்ளனர் என்று அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி தெரிவித்தார்.
இவர் நேற்று திங்கட்கிழமை காலை அக்கரைப்பற்று மாநகர சபையின் கேட்போர் கூடத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
இவர் இங்கு மேலும் பேசியவை வருமாறு:-
கடந்த ஜனாதிபதி தேர்தலில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவையும், அதை தொடர்ந்து இடம்பெற்ற பொது தேர்தலில் எமது தலைவர் அதாவுல்லாவையும் தோல்வி அடைய செய்ததன் மூலம் உண்மையில் முஸ்லிம் மக்களே தோல்வி அடைந்து விட்டனர். முஸ்லிம்களுக்கு எதிரான சர்வதேச, உள்நாட்டு அரசியல் கூட்டு சதி வலையில் சிக்கியே இவ்விதம் எமது மக்கள் பலிக் கடாக்கள் ஆகி விட்டனர். முஸ்லிம்களுக்கு எதிரான சர்வதேச, உள்நாட்டு அரசியல் கூட்டு சதி வலையில் சிக்கவே வேண்டாம் என்று எமது தலைவர் அதாவுல்லா மிகுந்த அக்கறையுடனும், முன்னெச்சரிக்கையுடனும் அப்போது எடுத்து கூறி வந்தததன் உண்மையையும், தார்ப்பரியத்தையும் உணர தவறி இருந்தனர், குறுகிய சுய நல அரசியல் முஸ்லிம் தலைமைகள் தீமையின் பக்கமும், எமது தலைவர் அதாவுல்லா தனித்து நன்மையும் பக்கமும் நின்று செயற்பட்டதை அன்று எமது மக்கள் புரிந்து கொள்ள முடியாமல் போய் விட்டபோதும் இன்று உண்மையை உண்மைக்கு உண்மையாகவே விளங்கி விட்டனர்.
ஏனென்றால் கடந்த பொது தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தேசிய காங்கிரஸிற்கு 16500 வாக்குகள் வரையிலேயே கிடைத்து இருந்தன. ஆனால் நடந்த உள்ளூராட்சி தேர்தலில் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் இருந்து மாத்திரம் எமக்கு 24000 வாக்குகள் வரையில் கிடைத்து உள்ளன. அம்பாறை மாவட்டத்தில் இருந்து மொத்தமாக 44000 வாக்குகள் வரையில் கிடைத்து உள்ளன. அதாவது இம்மாவட்டத்தில் தேசிய காங்கிரஸிற்கான மக்களின் ஆதரவும், அங்கீகாரமும் குறைந்த பட்சம் மூன்று மடங்கால் அதிகரித்து உள்ளன. மேலும் மூதூர் பிரதேச சபை, கிண்ணியா நகர சபை, தம்பலகாமம் பிரதேச சபை ஆகியவற்றிலும் தேசிய காங்கிரஸிற்கு ஆசனங்கள் கிடைத்து உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ்விடத்தில் நான் இன்னொரு விடயத்தையும் குறிப்பிட்டு சொல்ல வேண்டி உள்ளது. என்னவென்றால் இம்மகத்தான வெற்றி தேசிய காங்கிரஸிற்கு உரித்தானது ஒழிய எந்தவொரு வேட்பாளரினதும் தனிப்பட்ட செல்வாக்கினால் கிடைக்க பெற்றது அல்ல.
அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயர் பதவிக்கு சக்கி அதாவுல்லா உண்மையிலேயே மிக மிக பொருத்தமானவர் ஆவார். அக்கரைப்பற்று கன்னி மாநகர சபையின் மேயராக பதவியேற்று மிக குறுகிய காலத்துக்கு உள்ளேயே அக்கரைப்பற்று மாநகர சபையை அனைத்து வகைகளிலும் இவர் தன்னிறைவு அடைய செய்தார் என்று சொன்னால் அது மிகை அல்ல. அக்கரைப்பற்று கன்னி மாநகர சபை கலைக்கப்பட்டபோது அதன் வைப்பில் 14 மில்லியன் ரூபாயை சக்கி அதாவுல்லா விட்டு சென்றார். சபை கலைக்கப்பட்ட பிற்பாடும் அதன் வேலை திட்டங்கள் தங்கு தடை இன்றி தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்கிற தூய சிந்தனையுடனும், தூர நோக்குடனும் இவர் இதை செய்திருந்தார் என்பதும் வேறு எந்த சபைகளிலும் இவ்விதம் இடம்பெற்று இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடயங்களாக உள்ளன.
அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயர் பதவியை இரண்டாவது முறையாக அலங்கரித்து கொண்டிருக்கின்ற சக்கி அதாவுல்லாவின் காலத்தில் நாட்டின் மிக சிறந்த உள்ளூராட்சி சபையாக எமது மாநகர சபையை நிச்சயம் கொண்டு வருவோம். குறிப்பாக திண்ம கழிவகற்றல் முகாமைத்துவத்தை முறையாக கையாள்வதில் வெற்றி சாதனை படைத்து ஏனைய சபைகளுக்கு முன்னுதாரணமாக மாற வேண்டும் என்கிற இலட்சியத்தை வரித்து கொண்டு உள்ளோம். அதே போல அக்கரைப்பற்று மாநகர சபைக்கு உட்பட்ட இடங்களில் தனிப்பட்ட நபர்களால் அரசாங்க காணிகள் கையகப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இது ஒரு பாரிய நில கொள்ளை வியாபாரம் ஆகும். இதை நாம் நிச்சயம் தடுத்து நிறுத்துவோம். அதே போல அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதி தனியார்களால் கபளீகரம் செய்யப்பட்டு உள்ளது. அதையும் நிச்சயம் மீட்டெடுப்போம். மேலும் இம்மைதானத்தை சர்வதேச தரத்திலான மைதானமாக கொண்டு வர வேண்டும் என்கிற எமது தலைவர் அதாவுல்லாவின் அபிலாஷையையும் நிச்சயம் நிறைவேற்றுவோம்.