முஸ்லீம்களின் வெளியேற்றம் இனசுத்திகரிப்பா? த.தே.கூ. தலைவர்கள் நிதானத்தை கடைபிடிக்கவும்

தேவையற்ற விடயங்களுக்கெல்லாம் முந்திக்கொண்டு முன்னுக்கு ஓடிவரும் தலைவர் ஒருவர் முஸ்லீம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டமைக்கான பொறுப்பை ஒவ்வொரு தமிழனும் ஏற்க வேண்டுமெனக் கூறியுள்ளதுடன் இச்சம்பவத்தை இனசுத்திகரிப்பு என்று புது வியாக்கியானத்தையும் தந்துள்ள அந்த தலைவரை நான் கேட்க வேண்டிய கேள்விகள் பல உண்டு. நியாயமான பதில் தருவார் என நம்புகின்றேன். முஸ்லீம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டது இன சுத்திகரிப்பா? தமிழ் மக்களை முஸ்லீம் மக்கள் இன்றும் அன்பாகத்தான் பார்க்கிறார்கள் என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். முஸ்லீம்களை வெளியேற்றிய நிலைமையை யார் உருவாக்கினார்கள் அன்று? அப்பாவி தமிழ் மக்கள் மௌனம் சாதித்து வெளியேற்றப்பட்டவர்களுக்காக மௌனமாக அழுதார்களே அன்றி அவர்களால் வேறு என்னதான் செய்திருக்க முடியும். வாய்திறந்திருந்தால் என்னவாகியிருக்கும்?


இந்த 25ஆண்டுகளில் அவர்கள் பல துன்பங்களை அனுபவித்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 2004ம் ஆண்டுதான் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளாக செயற்பட்டவர்கள் அவர்களை அப்போதுதான் தமிழ் மக்கள் தேசிய தலைவர்களாகவும் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாகவும் ஏற்றுக்கொண்டவர்கள் 2004 இல்தான். ஆனால் சம்பவம் நடந்தது 1990ம் ஆண்டு. விடுதலைப் புலிகளுடனான நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்த த.தே.கூ இனருக்கு விடுதலைப்புலிகளுடன் பேசி இப்பிரச்சனைக்கு ஏன் தீர்வுகாண முயலவில்லை? அவர்களும் தமிழ் பேசுகின்றவர்கள், அவர்கள் தமிழை வளர்த்தவர்கள், வளர்ப்பவர்களும்கூட. இதை செய்திருக்க வேண்டியவர்கள் செய்யாது விட்டுவிட்டு தமிழ் மக்கள் முஸ்லீம்கள் வெளியேற்றத்துக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று. தமிழ் மக்கள் எவ்வாறு இக்குற்றத்திற்கு பொறுப்பாவார்கள்?
2004ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. யுத்தம் முடிந்து ஆறு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இந்த பத்து ஆண்டுகளாக நீங்கள் அவர்களுக்கு எவ்வாறு உதவினீர்கள்? எத்தகைய உதவிகளை அரசிடம் இருந்து பெற்றுக்கொடுத்தீர்கள்? அவர்களை மீளக்குடியேற்றுவதில் இருந்த தடைகள் என்ன? கிழக்கு மாகாணம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய இடங்களில் அவர்களுக்குரிய காணிகளில் குடியேற்றுவதில் என்ன கஸ்டம் இருந்தது என்பதை அறிய மக்கள் விரும்புகின்றனர். உங்ளுக்கு வெளிநாடுகளில் இருந்து பண உதவிகள் கிடைக்கவில்லையா? பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு சதமேனும் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளுக்கு உபயோகித்தீர்களா? வெறும் வாய்ப்பந்தல் போடாது அவர்களின் ஆதங்கத்தை உணர்ந்து செயற்படுவதே அவசியமாகும். பொறுப்புள்ள தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தாமல் தத்தமது கடமைகளை முன்னெடுப்பதே சாலச்சிறந்ததாகும்.

வீ.ஆனந்தசங்கரி செயலாளர் நாயகம்- த.வி.கூ