அதனால், உக்ரைன் மக்கள் உயிர் பயத்தில் அங்கிருந்து அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், மே 9-ம் தேதிக்குள் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா விரும்புவதாக உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக `The Kyiv Independent’ கடந்த வெள்ளிக்கிழமையன்று தனது ட்விட்டர் பக்கத்தில், “ரஷ்யா மே 9-ம் தேதிக்குள் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புவதாக உக்ரைன் உளவுத்துறை தகவல் தெரிவித்திருக்கிறது.
ரஷ்யாவில் மே 9-ம் தேதி நாஜி ஜெர்மனிக்கு எதிரான வெற்றி தினமாகக் கொண்டாடப் படுவதால், ரஷ்யப் படைகள் அதற்குள் போரை முடிவுக்குக் கொண்டுவர இருப்பதாகக் கூறப்படுகிறது” என்று தகவல் தெரிவித்திருக்கிறது.
மே 9-ம் தேதி ஹிட்லரின் ஜெர்மனி நாஜிப்படைகளை வீழ்த்தி இரண்டாம் உலகப்போரில் பெற்ற வெற்றியை ரஷ்யா பிரம்மாண்டமான முறையில் கொண்டாடிவருகிறது.
அன்றைய தினம் ரஷ்யாவில் தேசிய விடுமுறை என்பதால் அனைத்து விதமான தொழிற்சாலைகள், பள்ளிகள், அரசு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். தற்போது அதே நாளில் உக்ரைன் மீதான போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, ரஷ்யா ஏராளமான குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோரை உக்ரைனிலிருந்து கடத்தி வைத்திருப்பதாக உக்ரைன் குற்றம்சாட்டியிருந்தது.
இது தொடர்பாக உக்ரைன் ஒம்புட்ஸ்மேன் லியூட்மிலா டெனிசோவா, “84,000 குழந்தைகள் உட்பட 4,02,000 பேர் ரஷ்யப் படைகளால் அவர்களின் விருப்பத்துக்கு எதிராகக் கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர்” என்று தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில் குற்றம்சாட்டியிருந்தார்.
ஆனால் மாஸ்கோவின் கிரெம்ளின், கிட்டத்தட்ட உக்ரைன் ஒம்புட்ஸ்மேன் லியூட்மிலா டெனிசோவா குறிப்பிட்டிருந்த அதே எண்ணிக்கையைக் குறிப்பிட்டு, “உக்ரைனிலிருந்து அவர்கள் அனைவரும் சொந்த விருப்பத்தின் பேரில்தான் ரஷ்யாவுக்குச் சென்றனர்” என்று குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில், மே 9-ம் தேதிக்குள் உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்திக்கொள்ள இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் இரு நாட்டுப் பிரச்னையில் மிகவும் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது
(Vikatan)