முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப அங்கத்தவர்களில் ஒருவரும் முன்னாள் பிரதியமைச்சருமான நிரூபமா ராஜபக்ஷ, காலி முகத்திடலில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்துக்குச் சென்றிருக்கவில்லை. அவர், கண்டி- கெட்டம்பேயில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்திலேயே பங்கேற்றிருந்தார். அவருக்கு, மூன்றாவது வரிசையிலேயே ஆசனமும் ஒதுக்கப்பட்டிருந்தது.
நல்லாட்சி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்திருந்த பிரியங்கர ஜயரத்னவும் கண்டிக் கூட்டத்துக்குச் சமுகமளித்திருந்தார். இதேவேளை, முன்னாள் பிரதமர் தி.மு ஜயரட்ன, முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா, முன்னாள் பிரதியமைச்சர் தயாசித்த திசேரா மற்றும் விக்டர் அன்டனி ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.
மேற்குறிப்பிட்டவர்களில், முன்னாள் பிரதமர் தி.மு. ஜயரட்னவைத் தவிர ஏனையோர், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாகவே, பிரசாரங்களை மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.