இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரத்தின் மே தின அறிக்கை
இலங்கையின் அனைத்து தொழிலாளர்களும், விவசாயிகளும், அடக்கப்படும் தேசிய இனத்தவர்களும், சமூகத்தினரும், சமூகப் பிரிவினரும் இருந்த சில உரிமைகளையும் இழந்து தமது இருப்பை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலையில் பல விதமான சவால்களை எதிர்கொண்டுள்ளனர். அவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவனவாக அறியப்படும் தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் வெகுஜன அமைப்புகளும் தம்மளவில் சீரழிந்தும் ஆளும் வர்க்கத்தினரின் நடவடிக்கைகளால் பலமிழந்தும் காணப்படுகின்றன. மறுபுறத்தில் இலங்கை முதலாளி வர்க்கத்தினர் வெளிநாட்டு, சர்வதேச முதலாளிகளுக்கும் ஏகாதிபத்திய சக்திகளுக்கும் சேவகம் செய்து தம்மை தக்க வைத்துக் கொள்ளும் நிலையிலேயே இருக்கின்றனர்.
நாட்டின் பொருளாதாரம் ஏகாதிபத்திய நவதாராளவாத நாடுகளினதும், நிறுவனங்களினதும் தயவிலேய இருப்பதையே அவதானிக்க முடிகிறது. கடந்த ஒரு வருட கால நவதாராளவாத மைத்திரி- ரணில் ஆட்சி சிறிய ஜனநாயக இடைவெளியை ஏற்படுத்தி இருக்கின்ற போதும் நாட்டின் சாதாரண மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய திராணி அதற்கு கிடையாது. இவ்வாறு மே தினம் தொடர்பாக இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரத்தின் இணை அழைப்பாளர்களுக்கான டபில்யூ. சோரத்தின, இ.தம்பையா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
இந்த நிலையில் தேர்தலின் மூலம் தோற்கடிக்கப்பட்ட மஹிந்த தலைமையிலான நவ பழைமைவாத பேரினவாத பாசிச சக்திகள் மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வர முயற்சிக்கின்றன. இலங்கை சமூகத்தில் இன, மத, மொழி, சாதி பகை போன்றன நீறு பூத்த நெருப்பாக இருக்கின்றன.
இவ்வாறான பின்புலத்திலேயே இன்னொரு மே தினத்தில் அணித்திரள வேண்டியவர்களாக இருக்கின்றோம். மக்களின் நலன் பற்றி கலந்துரையாடினாலும் ஜனநாயக, இடதுசாரி சக்திகள் அவற்றின் சுய இருப்புடன் தொடர்புடைய நிகழ்ச்சி நிரலுடன் முடங்கி இருக்கின்றன. அவை மைத்திரி- ரணில் நவதாராளவாத அரசாங்கமும் மக்களின் பிர்சினைகளை தீர்க்க தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டுவதுடன் தன்னடக்கமாக இருக்கின்றன.
ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான இலங்கை மக்களின் போராட்டத்தின் தவிர்க்க முடியாத இடைவிளைவே மைத்திரி- ரணில் அரசாங்கம். ஜனநாயகத்திற்கான பயணமும் நீண்டதாவதுடன் பாரிய பொறுப்புகளையும் கொண்டதாகும்.
அந்தப் பயணம் புரட்சிகர, ஜனநாயக, இடதுசாரி சக்திகளின் பொது இணக்கப்பாட்டுடனான வேலைத்திட்டத்துடன் பொது மக்களை அணித்திரட்டி ஐக்கியப்பட்ட நடவடிக்கைகளினூடாகவே தொடர முடியும். அந்த வேலைத்திட்டத்தில் இலங்கையில் அனைத்து தொழிலாளர்கள், விவசாயிகள், அடக்கபட்ட தேசிய இனங்கள், சமூகங்கள், சமூகப் பிரிவினர் போன்றோரின் உரிமைகளை உறுதி செய்வதற்கான அரசியல், பொருளாதார, சமூகப் பண்பாட்டு கட்டுமானங்களை அமைப்பதற்கான குறுங்கால நீண்டகால நடவடிக்கைகளை உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்.
இதனால் இலங்கையின் அனைத்து மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் வென்றேடுக்கவும் புரட்சிகர, ஜனநாயக, இடதுசாரி ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் ஐக்கியப்பட்டு செயற்பட முன்வர வேண்டும். இதில் புரட்சிகர சக்திகளின் அர்ப்பணிப்பு அளப்பரியதாக இருக்க வேண்டியதன் அவசியம் உணரப்பட வேண்டும்.