இந்த மாதிரியாக ஓடும் காரில் வேறு யாருக்கும் உயிர் சேதம் வராமல் இலக்கு வைக்கப்பட்ட நபர் மட்டும் துல்லியமாக கொல்லப்படுவதற்கு களத்தில் நிகழ்நேர உளவு ஆற்றல் அவசியம்.
இந்த கொலை நடந்த பிறகு இரானின் உளவுத் துறை அமைச்சர் மஹ்மூத் அலாவி, இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே ஃபக்ரிசாதே இதே இடத்தில் கொல்லப்படுவார் என பாதுகாப்பு படைகளை தான் எச்சரித்ததாக தெரிவித்தார்.
மேலும், இந்த கொலையை திட்டமிட்டவர் “ஆயுதப் படையை சேர்ந்தவர்”. ஆயுதப் படையினர் மீது உளவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவவதில்லை என்றும் அவர் கூறினார்.
விளம்பரம்
ஆனால் அவர் குறிப்பிட்ட அந்த ஆயுதப்டை, இரானிய ராணுவத்தில் உயர் படையான இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (ஐஆர்ஜிசி) ஆகும். அதன் உறுப்பினர் ஒருவரே இந்த தாக்குதலை திட்டமிட்டதாக அமைச்சர் மஹ்மூத் அலாவி மறைமுகமாக கூறினார். தமது எச்சரிக்கையை அலட்சியப்படுத்தி விட்டு குறித்த இடம், நேரம் மற்றும் நாளில் ஃபக்ரிஸாதேவை தாக்கும் அளவிற்கு இரானிய படையில் அந்த நபர் உயர் பதவியில் இருப்பவராக இருக்கக் கூடும் என்றும் அமைச்சர் மஹ்மூத் தெரிவித்தார்.
மொஹ்சென் ஃபக்ரிஸாதேவும் இரானிய புரட்சிகர பாதுகாப்புப்படையில் உறுப்பினராக இருந்தவர்.
வெளிநாடுகளுக்காக உளவு பார்த்தவர்கள் அடைக்கப்பட்டிருக்கும் டெஹ்ரானின் எவின் சிறைச்சாலையின் இரானிய பாதுகாப்பு படையைச் பகுதியை சேர்ந்த பல தளபதிகள் தடுத்து வைக்கப்பட்டதாக அந்த சிறையின் உள்வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்ததன.
இரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் பெயருக்கு களங்கம் ஏற்படுவதைத் தடுக்க அங்கு அடைக்கப்பட்டிருப்பவர்களின் பெயர் மற்றும் பதவிகளை வெளியே தெரிவிக்காமல் இரானிய அரசு தவிர்த்து வருகிறது.
ஐஆர்ஜிசியின் குர்து படையின் முன்னாள் உளவு அதிகாரி ஒருவர், இரானிய தூதர்கள் மற்றும் ஐஆர்ஜிசியின் கமாண்டர்கள் சிலருக்கு எதிராக வெளிநாட்டு முகமைகள் சில ஆதாரங்களை சேகரித்துள்ளதாக தெரிவித்தார்.
பெண்களுடனான அவர்களின் தொடர்பு உட்பட பல ஆதாரங்களை அவர்கள் சேகரித்துள்ளனர். அந்த ஆதாரங்கள் அதிகாரிகளை மிரட்டுவதற்காக வெளிநாட்டு முகமைகளால் பயன்படுத்தப்படலாம் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இரானின் தலைநகர் டெஹ்ரானிலிருந்து 30 கிமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒரு சேமிப்புக்குக் கிடங்குக்குள் நுழைந்தனர்.
அங்கு 32 லாக்கர்கள் இருந்தன. ஆனால் அதில் எந்த லாக்கரில் முக்கிய கோப்புகள் உள்ளன என்பது அவர்களுக்கு தெரியும். ஏழு மணி நேரத்துக்கும் குறைந்த காலகட்டத்தில் அவர்கள் 27 லாக்கர்களின் பூட்டை உருக்கினர். அதன்பின் அரை டன்னுக்கும் அதிகமான அணு உலை தொடர்பான ஆவணங்களை அவர்கள் திருடிச் சென்றனர் ஆனால் இது குறித்து அதிகாரிகள் ஏதும் சொல்லவில்லை.
மூன்று மாதங்களுக்கு பிறகு அந்த ஆவணங்கள் 1,2000 மைல்களுக்கு அப்பால் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்தது.
நேதன்யாஹூ
அப்போது இஸ்ரேல் பிரதமராக இருந்த பெஞ்சமின் நெதன்யாஹு, திருபட்பட்ட ஆவணங்கள் மொசாத்தின் (இஸ்ரேலின் உளவுப் அமைப்பு) நடவடிக்கையால் கைப்பற்றப்பட்டவை என்று கூறி காட்சிப்படுத்தினார். அந்த சமயத்தில் அந்த ஆவணங்கள் போலியானவை என இரான் அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல அம்மாதிரியான ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை என்றும் அவர்கள் கூறினர்.
ஆனால், 2021ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இரானிய அதிபர் ஹசன் ரூஹானி தனது பதவியின் கடைசி நாளன்று இரானின் அணு ஆவணங்களை இஸ்ரேல் திருடியதற்கான ஆதாரங்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் காண்பித்ததாக உறுதிப்படுத்தினார்.
2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு சிறப்பு செய்தியாளர் சந்திப்பில், நெதன்யாஹு, ஒரு அறிவிக்கப்படாத அணு ஆயுத திட்டத்தில் மொஹ்சென் ஃபக்ரிஸாதேவின் பங்கு குறித்து விவரித்தார்.
“மொஹ்சென் ஃபக்ரிஸாதே… பெயரை நினைவில் வைத்து கொள்ளுங்கள்” என மீண்டும் வலியுறுத்தினார். ஃபக்ரிஸாதே இரு வருடங்கள் கழித்து கொலை செய்யப்பட்டார்.
“சுடுங்கள்… பேசாதீர்கள்!”
கடந்த 20 வருடங்களில் இரானின் பல முக்கிய அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டுள்ளனர். இரானின் அணு மற்றும் ராணுவ இடங்களில் பல சேதங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால் இதுவரை இம்மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை இரான் பாதுகாப்பு படையினர் கைப்பற்றியதில்லை.
மஹ்மூத் அஹ்மத்நிஜாத் அதிபராக இருந்த கடைசி வருடமான 2013ஆம் ஆண்டில் ஐஆர்ஜிசி கமாண்டர்கள், உளவுத் துறை அதிகாரிகள் மற்றும் இறந்தவர்கள் குறித்து மத உரையாற்றுபவர்கள் பலர் மொசாத்திற்கு உளவு பார்த்த குற்றத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக வதந்திகள் பரவின. ஆனால் அந்த குற்றச்சாட்டுகள் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
அதில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் இரான் உளவுத் துறையில், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை பிரிவில் இருக்கும் அதிகாரி. இரானிய நீதிமன்றம் பொதுவெளியில் தெரிவிக்காமல் அவர் மீது குற்றம் சுமத்தி, மரணத் தண்டனை விதித்து அதை நிறைவேற்றியது.
கடந்த வருடம்தான் அஹமதினேஜாத் தனது உளவுத் துறை அமைச்சகத்தில் மொசாத் நுழைந்துவிட்டதாக உறுதிப்படுத்தினார்.
அவர், “இஸ்ரேலிய உளவாளிகளை கட்டுப்படுத்த மற்றும் இரானில் இஸ்ரேல் வகுக்கும் திட்டங்களை ஒடுக்க நியமிக்கப்பட்ட மூத்த அதிகாரிகளே இஸ்ரேலிய முகவர்கள் ஆனது இயல்பானதா?” என்று தெரிவித்தார்.
இஸ்ரேல் அரிதாகவே தனது மொசாத் நடவடிக்கைகள் குறித்து பேசும். இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் ஓய்வு பெற்ற ஜெனரல் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரி அமோஸ் கிலாட் இது சில நல்ல காரணங்களுக்காகதான் என பிபிசியிடம் தெரிவித்தார்.
“பொதுப்படையாக பேசுவதற்கு எதிரானவன் நான். நீங்கள் சுட விரும்பினால் சுட்டுவிட வேண்டும் அதைவிடுத்து பேசிக் கொண்டு இருக்கக்கூடாது. மறைமுகமாக எந்த விளம்பரமும் இன்றி சிறப்பான வேலைகளை செய்வதே மொசாத்தின் வேலை என்று கூறப்படுகிறது.”
இன்று இரானின் பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகளில் உள்ள உயர் அதிகாரிகளை மொசாத் நெருங்கிவிட்டது என முன்னாள் இரானிய அதிகாரிகள் கவலைக் கொள்கின்றனர்.
முன்னாள் இரானிய உளவுத் துறை அமைச்சரும் அதிபர் ருஹானியின் மூத்த ஆலோசகருமான அலி யூனேசி நேர்காணல் ஒன்றில் இதுகுறித்து எச்சரிக்கை விடுத்தார். “மொசாத்தின் தாக்கம் இரானின் பல பகுதிகளில் மிக அதிகமாகவுள்ளது. இரானில் அதிஉயர் பதவிகளில் இருப்பவர்கள் அவர்களின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் அஞ்ச வேண்டிய நிலை உள்ளது”