அரசியலமைப்பில் தனது வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை பயன்படுத்தி, ஜனாதிபதி அதிரடியான நடவடிக்கையை எடுத்திருந்தார். அத்துடன், அவ்விருவரும் வகித்த பதவிகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டனர். அந்த அமைச்சரவை மாற்றத்தில், இன்னும் சிலருக்கு பதவிகளும் வழங்கப்பட்டன.
அவ்வாறு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தலைமையில் முதலாவது அமைச்சரவைக் கூட்டம், நேற்றுமுன்தினம் (07) நடைபெற்றது.
இதனிடையே, அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யமாட்டேன் என பகிரங்கமாக அறிவித்திருந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, அமைச்சரவைக் கூட்டத்துக்கும் செல்லமாட்டேன் என அறிவித்துவிட்டார்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுந்திர முன்னணியைச் சேர்ந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் வகிக்கும் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர் என்று, கட்சி அறிவித்துள்ளது.
அதற்கமைய, களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், இயந்திரப் படகுகள் மற்றும் கப்பற் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளராக ஜயந்த சமரவீரர் பதவி வகிக்கும் நிலையில், தனது இராஜாங்க அமைச்சுப் பதவியை நேற்றுமுன்தினம் (07) முதல் அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளதாக ஜயந்த சமரவீர உறுதிப்படுத்தியுள்ளார்.
விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியில், ஜயந்த சமரவீர (களுத்துறை), நிமல் பியதிஸ்ஸ (நுவரெலியா), காமினி வெலேபொட (இரத்தினபுரி) உத்திக பிரேமரத்ன (அனுராதபுரம், மற்றும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான மொஹமட் முஸ்ஸமில் ஆகியோர் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.