இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 54 பேரையும் 34 படகுகளையும் உடன் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில், பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் 5ஆவது தடவையாக அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘தென் தமிழ்நாட்டின் பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஏழை அப்பாவி மீனவர்கள் 5ஆவது முறையாக தொடர்ந்து மீண்டும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அது குறித்து தங்களுக்கு மீண்டும் கடிதம் எழுதுகிறேன். சில வார இடைவெளியில் 5 தடவை இது போன்ற சம்பவம் நடந்துள்ளதை மனவேதனையுடன் தங்களிடம் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். தமிழ்நாட்டில் நாகபட்டினத்தை சேர்ந்த 19 மீனவர்கள் அவர்களது 2 படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்த போது 10 ஆம் திகதி அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காங்கேசன் துறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதன் மூலம் இதுவரை 54 மீனவர்கள் இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ளனர். மேலும் 34 படகுகளும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, இலங்கை அரசின் பிடியில் சிக்கி தவிக்கும் மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விரைவில் மீட்டு தரும்படி தங்களுக்கு மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறேன்.இலங்கை கடற் பரப்பிற்குள் எல்லை மீறி மீன்பிடிக்கும் கடற் தொழலாளர்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயல வேண்டும் என்ற கோரிக்கை மோடியிடம் முன்வைத்தால் சிலவேளை கருத்தில் கொள்வாரோ…..?