கர்நாடகாவில் உள்ள ஹாசன் தொகுதி எம்பியாக இருப்பவர் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த பிரஜ்வல் ரேவண்ணா. இவர், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன். இந்த முறையும் அதே தொகுதியில் பாஜ கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டார். இந்த தொகுதியில் கடந்த 26ஆம் திகதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.
இதனிடையே பாலியல் தொல்லை கொடுத்தாக பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தை ரேவண்ணா மீது அவரது வீட்டில் வேலை செய்து வந்த அவர்களின் உறவுக்கார பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். இந்த நிலையில் பிரஜ்வல் மீதான பாலியல் புகார் தொடர்பாக பென்டிரைவ் ஒன்று சிக்கியுள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியானது.
அதில், கடந்த 2019 முதல் 2022 வரை பல பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான 3000க்கும் மேற்பட்ட வீடியோ காட்சிகள் இருப்பதாக தகவல் வெளியாகியது.
இதன் எதிரொலியாக பிரஜ்வாலை கைது செய்ய தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை அளித்தது. மறுபக்கம் பாலியல் புகார் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து மாநில அரசு உத்தரவிட்ட நிலையில், அவர் மஜத் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார்.
இந்த நிலையில், வெளிநாட்டுக்கு ஓடிப் போய்விட்ட பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்வதில் சிறப்பு புலனாய்வு குழு தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் முதல் கட்டமாக பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக எஸ்ஐடி. தரப்பில் தேடப்படும் குற்றவாளி என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் உள்ள எந்த விமான நிலையத்திற்கு வந்தாலும் பிரஜ்வல் கைது செய்யப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.