யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சகல குற்றச்செயல்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துவருவதாக, யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வருண ஜெயசுந்தர தெரிவித்தார். அதன் ஓர் அங்கமாக, தற்போது முன்னெடுக்கப்படும் வீதிச் சுற்றுக்காவல் நடவடிக்கைகளை, இனிவரும் நாள்களில் அதிகரிக்கப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில், இன்று (12) நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்டச் சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது, யாழ்ப்பாணக் குடாநாட்டில், அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் குற்றச்செயல்கள் தொடர்பில், மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகளால் பொலிஸாருக்கு சுட்டிக்காட்டப்பட்டன.
குறிப்பாக, கடந்த சில நாள்களாக, கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தனங்களப்பு பகுதியில், மணல் கொள்ளை மிகவும் மும்முரமாக இடம்பெற்றுவருவதாகத் தெரிவித்த சாவகச்சேரி பிரதேசச் செயலாளர், இதனால் அப்பகுதியில், மணல் வளம் அழிவடைந்து வருவதாகவும் கூட்டிக்காட்டினார்.
அத்துடன், யாழ்ப்பாணம் மாநகரின் புறநகர் பகுதிகளை இலக்குவைத்து, அண்மைக் காலங்களில் திருட்டுச் சம்பவங்களும் கத்திமுனையால் கொள்ளையிடும் சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக, இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
மேற்கண்ட விடங்களை கவனத்தில் எடுத்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், இவ்விடயங்கள் தொடர்பில் பொலிஸார் பல நடவடிக்கைகளை ஏற்கெனவே முன்னெடுத்திருப்பதாகக் குறிப்பிட்டதுடன், இனிவரும் காலங்களில், சிறப்பு பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி சகல குற்றச்செயல்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.