இப் பிரேரணையின் மூலம் யாழ்ப்பாணத்தில் குறிப்பாக இளைஞர் சமுதாயத்தினர் மத்தியில் ஹெரோயின் மற்றும் சட்டவிரோத போதைப்பொருட்களின் பாவனை அதிகரித்து காணப்படுவதன் காரணமாக குற்றச் செயல்கள், திருட்டுச் சம்பவங்கள், பெண்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளமை, மற்றும் கும்பல்களின் வன்முறைகள் வளர்ச்சி பெற்றுள்ளமை தொடர்பாக பாராளுமன்றத்தின் கவனத்தை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
“யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞர்களின் எண்ணிக்கை தினம் தினம் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக சமூகத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து, பொதுமக்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் மற்றும் கும்பல்களின் வன்முறைகள் கணிசமாக அதிகரித்துள்ளன. இந்த நிலை தொடருமானால், எதிர்காலம் மோசமாகவும், கட்டுப்பாடற்றதாகவும் மாறும்” என அவர் தனது உரையின் மூலம் தனது கரிசனையை தெரிவித்தார்.
அத்துடன், யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு தேவையான புனர்வாழ்வு நிலையங்கள் இல்லாமை, போலீசாரின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லாதது, சமூகத்தில் பெண்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் தாக்குதல்களுக்கு ஆளாகின்றனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
“நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்க, இளைஞர்களை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மீட்க மற்றும் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில், உடனடி நடவடிக்கைகள் தேவை. அரசாங்கம், சட்ட அமலாக்க அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் ஒருங்கிணைந்த முறையில் செயல்பட வேண்டியது அவசியம்” எனவும் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி வலியுறுத்தினார்.
இப் பிரேரணை குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ஆதரவு தெரிவித்ததோடு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு, கிழக்கு பகுதிகளில் போதைப்பொருள் விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டது.