தற்போதுள்ள கொரோனா நிலைமைகள் தொடர்பில், யாழ். மாவட்டச் செயலகத்தில், இன்று (06) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா நிலைமை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்ற நிலை, சற்று குறைவடைந்து காணப்படுகின்றது என்றார்.
யாழ். மாவட்டத்தில், மொத்தமாக 13 ஆயிரத்து 944 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த அவர், இறப்புக்களை பொறுத்தவரை 274ஆக அதிகரித்துள்ளதாகவும் அதேநேரம், 5,641 குடும்பங்கள் யாழில் தனிமைப்படுத்தலில் உள்ளனர் எனவும் கூறினார்.
மேலும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில், தடுப்பூசி வழங்குவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும், 30 வயதுக்குட்பட்ட 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் சுகாதாரப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.
‘மேலும், சீனி விலையும் தற்போது குறைவடைந்துள்ளது. அதேநேரம், உணவு ஆணையாளர் திணைக்களத்தினூடாக அதேநேரம் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் இணைந்த வகையில், சீனி பகிர்ந்தளிப்புக்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
‘தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையில் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என கண்காணிப்பதற்கு ஏற்பாடு மேற்கொள்ளப்படுகின்றது.
‘எனவே, பதுக்கல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் மற்றும் அதிக விலைக்கு பொருள்களை விற்பனை செய்வோர் பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபையின் ஊடாக அதனை தடுத்து நிறுத்துவதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன’ எனவும், மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.