யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர்களுக்கான ஆடை ஒழுங்கு விதிகள், எதிர்வரும் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கலைப்பீட மாணவர்கள் ஒன்றிய நிர்வாகத்தின் கலந்துரையாடலொன்று, நேற்று வியாழக்கிழமை (03) இடம்பெற்ற போதே, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும், பெண்கள் சேலை அணிய வேண்டும் எனவும் ஆண் மாணவர்கள் டெனிம் மற்றும் ரீ-சேர்ட் அணியக்கூடாது, சேர்ட் அணிந்துதான் அதுவும் ‘இன்’ பண்ணிதான் அணிய வேண்டும், சப்பாத்தை தினமும் அணிய வேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், முஸ்லிம் மாணவிகள் அவர்களின் கலாசார உடைகளுக்கு ஏற்றவகையில் ஆடைகளை அணிந்து, விரிவுரைகளில் கலந்துகொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், பல்கலைக்கழகக் கல்வி முடிந்து வேலைகளுக்குச் செல்லும் போது, மேற்கூறப்பட்ட விதத்திலேயே ஆடைகளை அணிந்துச் செல்ல வேண்டும் என்பதால், பல்கலைக்கழகத்திலேயே இப்பழக்கத்தைப் பழக்கும் வகையில் நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக கலைப்பீட மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. இவ்வாறானதொரு நடைமுறை? பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்ததாக கலைப்பீடாதிபதி நா.ஞானகுமாரனை மேற்கொள்காட்டி கடந்த வாரத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன. அதற்கு பலதரப்பட்டவர்களிடம் இருந்து எதிர்ப்புகள் வெளியாகியிருந்தன. அதன்பின்னர், அவ்வாறு ஒரு அறிவித்தல்? பேரவைக் கூட்டத்தில் எடுக்கப்படவில்லையென துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் அறிவித்திருந்தார். இந்நிலையில், மீண்டும் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால், கலைப்பீட மாணவர்களுக்கு இந்த நடைமுறையானது அமுல்ப்படுத்தப்படவுள்ளது.