1. திருப்பித் திருப்பி அதிகாரத்தொனியிலேயே அறிக்கைகள். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் எப்போது சமூகத்திற்கு முன் மாதிரியாக நடந்தார்கள் அவர்கள் கூப்பிட்டதும் கூட்டத்திற்கு வருவதற்கு. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் பெண்களின் நிலை என்ன? பகிடிவதை என்ற பெயரில் பல்கலைக்கழக மாணவர்கள் கேவலமான வன்முறையில் ஈடுபடுவது ஏன்? இதுவரை தமிழ் சமூகத்தை பாதிக்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் எத்தனை ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தங்களுக்கு வெள்ளையடிப்பதற்கு அரசியல் கைதிகள் பிரச்சினையை கையிலெடுக்கிறார்களா என்ற சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாதது?
2. வடக்கு கிழக்கு தமிழ் அரசியல் வாதிகள் அரசியல் கைதிகளை விடுவிக்க யாழ் பல்கலைக்கழக மாணவர்களைச் சந்தித்து என்ன பயன்? கலந்துரையாடலுக்கு அவர்களை அழைப்பதானால் முதலில் பண்பாக அழைக்க வேண்டும். ரவுடித்தனமாக மிரட்ட முடியாது.
“அரசியல் கைதிகள் தொடர்பாக உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை யாழ்.பல்கலைகழகத்தின் மாணவர் ஒன்றியத்துடன் கலந்துரையாடி இறுதி தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டி உங்களை அழைக்கின்றோம். வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளையும் சார்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம். இவ் அழைப்பினை உதாசீனம் செய்பவர்கள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை உதாசீனம் செய்பவர்களாக கருதப்படுவார்கள்”. – யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம்
3. “மாணவர்கள் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடாத்துவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், அவர்கள் நிர்வாகத்தை முடக்கி போராட்டத்தை முன்னெடுக்க இயலாது.
நிர்வாக முடக்கல் எதிரொலியாக 3 பீடங்களின் கல்விச் செயற்பாடுகளை நிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. விடுதிகளில் இருந்து மாணவர்கள் வெளியேறிய பின்னர் 10 மாணவர்கள்தான் போராட்டத்தில் பங்கெடுப்பார்கள்”.- யாழ் பல்கலைகழகத் துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன்.
அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்துடன் இணைந்து போராட்டங்களை முன்னெடுத்தல் என்ற தீர்மானத்தை அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு எட்ட வேண்டும் இதன் பின்பு போராட்டம் பற்றி முடிவெடுத்து செயற்படுவது நலம் இதனைத் தவர்த்து ‘தமிழ்’ என்ற அடையாளத்திற்குள் ‘குதிரை’களுக்கு பின்னால் ஒழித்திருந்து போராட முற்படுவது போராட்டத்தின் தோல்வியையும் உண்மைத் தன்மையையும் கேள்விக்குறியாக்கும்.
(Jeyabalan Thambirajah)