யாழ். மாநகர சபைக்கு முதல்வர் நியமனம்

யாழ். மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அதன் முதலாவது சமர்ப்பிப்பின் போது தோற்கடிக்கப்பட்டது. இதனை அடுத்து முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

தமிழரசுக் கட்சியின் சார்பில் முன்னாள் முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட்டின் பெயர் முன்மொழியப்பட்டது. 

இது தொடர்பில் ஆளுநர் தலைமையில் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் முன்னாள் உள்ளூராட்சி ஆணையாளர்களில் ஒருவரும் கூடி ஆராய்ந்ததாகவும், அதன் பின் யாழ். மாநகர சபையின் முதல்வராக, முன்னாள் முதல்வர் இ. ஆர்னோல்ட் பிரகடனப்படுத்தப்பட உத்தரவிட்டுள்ளதாகவும் ஆளுநர் செயலக வட்டாரங்களில் இருந்து அறிய முடிந்தது.

2012 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தின் 66 (எ) பிரிவின் கீழ், கடந்த வியாழக்கிழமை அன்று நடாத்தப்பட்ட தெரிவின் மூலம், முன்மொழியப்பட்ட படி இ. ஆர்னோல்ட் யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வராகப் பிரகடனப்படுத்தப்படுவதற்கான விசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது.