யுத்தம் மற்றும் வன்செயல்கள் காரணமாகப் பாதிப்புக்களையும், இழப்புக்களையும் சந்தித்த மக்களுக்கு இழப்பீட்டுக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கான பணிகளை துரிதப்படுத்துமாறு புனர்வாழ்வு அதிகார சபையின் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார். மீள்குடியேற்ற, புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்துசமய அலுவல்கள் அமைச்சின் கீழியங்கும் புனர்வாழ்வு அதிகாரசபைக்கே அமைச்சர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், –
இதன்படி எதிர்வரும் 9ஆம் திகதி முல்லைத்தீவில் 320 பேருக்கும், கிளிநொச்சியில் 300 பேருக்கும், யாழ்ப்பாணத்தில் 170 பேருக்கும் முதல் தொகுதி கொடுப்பனவுகளுக்கான காசோலைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் 690 பேருக்கு காசோலைகளை வழங்கும் இந் நிகழ்வுகள் 9ஆம் திகதி காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலும், பகல் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்திலும், மாலை யாழ். மாவட்ட செயலகத்திலும் நடைபெறவுள்ளது.
இழப்பீட்டுக் கொடுப்பனவுகள் வழங்கப்படும் நிகழ்வைத் தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் கோரிக்கைகள் மற்றும் தேவைகளுடன் வரும் மக்களையும் சந்தித்து அவர்களுக்குரிய தீர்வுகளை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தெரிவித்தார். ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இந்த இழப்பீட்டுத் தொகை பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமானதாக இல்லை என்பதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட திட்டங்களை ஏற்படுத்தி மேலும் இழப்பீட்டுக்களைப் பெற்றுக்கொடுக்கவும், எஞ்சியவர்களுக்கும், உரிய இழப்பீடுகளைப் பெற்றுக்கொடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.