இன்று திங்கட்கிழமை (16) பிற்பகல் நல்லூர் றியோ ஐஸ்கிறீம் விற்பனை நிலையத்திற்கு முன்பாக இச்சம்பவம் இடம்பெற்றது. றியோ பணியாளர்களும் மேலும் சிலரும் இணைந்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய றியோ பணியாளர்கள் இருவர் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் தப்பியோடிவிட்டனர் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வைத்திய கலாநிதி நந்தகுமார் மற்றும் அவரது நண்பரான யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தை சேர்ந்த த.சிவரூபன் ஆகியோர் இன்று பிற்பகல் கொரோனா விழிப்புணர்வில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, வெளிநாட்டு பிரஜைகள் இருவர் றியோ ஐஸ் கிறீம் விற்பனை நிலையத்தினுள் செல்வதை அவதானித்தனர்.
அங்கு சென்ற மருத்துவரும் அவரது நண்பரும் குறித்த வெள்ளை இனத்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் என்பதை றியோ விற்பனையாளர்களுக்கு எடுத்துக் கூறினர்.
இது தொடர்பாக யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரிக்கு தகவல் வழங்கிய வைத்தியர் நந்தகுமார் அவர் வரும்வரை தமது நண்பருடன் அங்கு காத்திருந்தார். இதன்போது றியோ ஐஸ்கிறீம் நிலைய பணியாளர்களும் வேறு சிலரும் திடீரென இருவர் மீதும் மோசமாக தாக்குதல் நடத்தினர். கற்களாலும் எறிந்தனர்.
இதையடுத்து, அங்கிருந்து தப்பிச்சென்ற இவர்கள் இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, அங்கு சென்ற பொலிஸார் தாக்குதலாளிகள் இருவரை மட்டும் கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
சம்பவம் தொடர்பாக வைத்தியரும் அவரது நண்பரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளனர்.
உலகளாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வைத்தியர் ஒருவர் தாக்கப்பட்டமை மருத்துவ துறையினரிடையே அதிர்ச்சியையும் கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்கத்கது.