வெள்ளைக் கொடி விவகாரத்தை விசாரணை செய்து தவறிழைத்தோர் தண்டிக்கப்படவேண்டும்
* நிலத்தை முத்தமிடும் போது மஹிந்தவுக்கு எதுவும் தெரியாது
* பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்கிய மஹிந்தவுக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும்.
2009 ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி யுத்தம் முடிந்துவிட்டதாக பாராளுமன்றத்தில் அறிவிக்கும்போது பிரபாகரன் உயிருடன் இருந்தார். மே 16ஆம் திகதி வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியபோது விமான நிலையத்தில் இறங்கிய மஹிந்த ராஜபக்ஷ தரையை முத்தமிட்டார்.
மே 18ஆம் திகதி எம்மை அலரிமாளிகைக்கு அழைத்து பதவிஉயர்வு வழங்கினார். எனினும் யுத்தம் முடிந்துவிட்டதா? இல்லையா? என்பது கூட அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. யுத்தம் முடிந்துவிட்டதாக 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் தம்பட்டம் அடித்தனர். அவ்வாறு அறிவிக்கும்போது கூட பிரபாகரன் உயிருடன் இருந்தார்.
அன்று மாலை நான் வேறொரு வேலைக்காக பாராளுமன்றம் வந்துவிட்டு காரில் திரும்புகையிலேயே பிரபாகரனின் சடலம் மீட்கப்பட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது என பிராந்திய அமைச்சர், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதேவேளை யுத்தத்தின் கடைசி வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட கேவலமான செயற்பாடுகளின் காரணமாகவே வெள்ளைக்கொடி விவகாரம் போன்ற குற்றச்சாட்டுக்கள் இராணுவத்தின் மீது சுமத்தப்பட்டது. வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி யாராவது தவறு செய்திருந்தால் அவர்களைத் தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி வழங்கி மஹிந்த ராஜபக்ஷவை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்து தூக்குத்தண்டனை வழங்கவேண்டும் என்று தெரிவித்த அவர், பழிவாங்கலின் உச்சத்துக்கே சென்ற மஹிந்த ராஜபக்ஷ இன்று தனது குடும்பம் பழிவாங்கப்படுவதாக கண்ணீர்வடிப்பது நகைப்புக்குரியது என்றும் கூறினார்.
17 நிதிச் சட்டமூலங்களை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தின் போது தனது கன்னியுரையை நிகழ்த்திய அமைச்சர் சரத் பொன்சேகா, கடந்த காலத் தேர்தல்கள், யுத்தத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள், ராஜபக்ஷ அரசாங்கத்தின் மோசடிகள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்தார்.
மேலும் உரையாற்றிய அவர், 2005 மற்றும் 2010 தேர்தல்களில் தோல்வியடைந்த மஹிந்த ராஜபக்ஷ பேராசை காரணமாகவே 2015 தேர்தலிலும் போட்டியிட்டுத் தோல்வியடைந்த நிலையில் இன்று பாராளுமன்றத்தின் ஒரு உறுப்பினராக எதிர்த்தரப்பில் அமர்ந்திருக்கிறார். 2005 தேர்தலின் போது புலிகளுக்கு பெருந்தொகை பணம் வழங்கப்பட்டது. பசில் ராஜபக்ஷ ஊடாக இந்தப் பணம் புலிகளுக்கு வழங்கப்பட்டது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாதிகளுக்கு உதவிய நபருக்கு தூக்குத் தண்டனையே வழங்கப்பட வேண்டும்.
இதேபோல 2010 தேர்தலிலும் வாக்கு எண்ணும் நிலையத்தில் பல்வேறு மோசடிகள் செய்தே மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டினார். 2015 தேர்தலிலும் வாக்கு எண்ணும் நிலையங்களில் மோசடிசெய்ய முயற்சி நடந்து. 2010 தேர்தலில் என்னை கைது செய்தது போலவே மைத்திரிபால சிறிசேனவையும் கைது செய்ய திட்டம் தீட்டப்பட்டிருந்தது.
கேள்விமனு வழங்குவதில் மோசடி செய்ததாக பொய்க் குற்றஞ்சாட்டி என்னை கைதுசெய்து உள்ளே அடைத்தார்கள். எம்மைப் போன்றே சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் 35 பேர் பழிவாங்கப்பட்டு பணி நீக்கப்பட்டார்கள். யுத்தம் முடிவடைவதற்கு இரு மாதங்கள் இருக்கையில் வவுனியா பிரதேசத்தில் பணிபுரிந்த அதிகாரி ஒருவரை யுத்தத்துக்குத் தலைமைதாங்க வைப்பதற்கு கோட்டாபய ராஜபக்ஷ முயற்சிசெய்தார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ஆயுதங்களை பரீட்சித்து பெறுவதற்காக எனக்கு சீனா செல்ல நேரிட்டது. ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி முதல் மே 19ஆம் திகதி வரையான காலப்பகுதியில் எஞ்சியிருந்த புலிகள் களப்பு பகுதிக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தனர். இராணுவத்தினர் தினமும் 200, 300 மீட்டர்கள் முன்னேறிச் சென்றார்கள். இந்தக் காலப் பகுதியில் எவருக்கும் யுத்தத்தை முன்னெடுக்கக் கூடியதாகவிருந்தது.
யுத்தத்தின் கடைசி வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட கேவலமான செயற்பாடுகளின் காரணமாகவே வௌ்ளைக்கொடி விவகாரம் போன்ற குற்றச்சாட்டுக்கள் இராணுவத்தின் மீது சுமத்தப்பட்டது. இது பாலில் ஒரு துளி விஷம் கலந்ததைப் போலானது. யுத்தத்துக்கு தலைமைதாங்கிய நான் சர்வதேச சட்டதிட்டங்களையும், மனிதாபிமானத்தையும் மதித்தே யுத்தத்தை முன்னெடுத்தேன். யாராவது இதற்கு முரணாக செயற்பட்டு தவறு செய்திருந்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
யுத்தம் முடிவடைவதற்கு முன்னரே மே மாதம் 16ஆம் திகதி விமான நிலையத்தில் வந்திறங்கிய மஹிந்த ராஜபக்ஷ நிலத்தை முத்தமிட்டார். மே மாதம் 18ஆம் திகதி எனக்கு பதவியுயர்வு வழங்கினார். யுத்தம் முடிவடைந்துவிட்டதா எனக் கூடத் தெரியாத அரசதலைவராகவே அவர் இருந்தார். நான் வாகனத்தில் சென்றுகொண்டிருக்கையிலேயே பிரபாகரன் கொல்லப்பட்ட தகவலை அறிந்தேன். வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அதன் மூலமே உண்மை நிலை வெளியில் வரும். எந்த நாட்டிலும் யுத்தத்தை வெற்றிகொண்ட பின் அந்த கௌரவத்தைப் பெறுவதற்காக நாட்டு ஜனாதிபதி நாடு பூராகவும் பதாதைகள் ஒட்டுவது கிடையாது. ஆனால் ராஜபக்ஷ குடும்பத்தினர் யுத்த வெற்றியை தம்வசப்படுத்த முயன்றார்கள்.
1991ஆம் ஆண்டு அன்றிருந்த இராணுவத் தளபதி ரஞ்ஜன் விஜயரட்னவின் காலைப்பிடித்து அமெரிக்காவுக்கு ஓடிய கோட்டாபய ராஜபக்ஷவினால் எப்படி 2 இலட்சம் படையினரை வழிநடத்த முடியும். இவர் புத்தகம் வெளியிட்டு தானே யுத்தத்தை வெற்றிகொண்டதாகக் காண்பிக்க முயல்கிறார்.
220 கிலோ தங்கம் மீட்பு
யுத்தம் முடிவடைந்து ஒரு வாரங்களின் பின் சுமார் 220 கிலோ கிராம் தங்கத்தை மீட்டெடுத்தோம். இதன் உரிமையாளர்களின் பெயர் விபரங்களும் திரட்டப்பட்டன. ஆனால் 110 கிலோ கிராம் தங்கமே கண்டெடுக்கப்பட்டதாக பசில் ராஜபக்ஷ அப்போது கூறியிருந்தார்.
நான் இராணுவத் தளபதியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் சுமார் 400, 500 கிலோ கிராம் தங்கம் கிடைத்தது. எஞ்சிய தங்கத்துக்கு என்ன நடந்தது என முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஜனவரி 8ஆம் திகதி நாட்டை சுரண்டிய சர்வாதிகாரியை வீட்டுக்கு அனுப்பினோம்.
எந்த நாளும் அதிகாரத்தில் இருக்க முடியும் என்று அன்றைய ஆட்சியாளர்கள் நம்பியிருந்தார்கள். அன்று ஜனாதிபதியாகவிருந்த மஹிந்த ராஜபக்ஷ எம்பியாகவும், நான் ஆளும் தரப்பில் அமைச்சராகவும் அமர்ந்திருக்கிறேன். சட்டத்தை கையில் எடுத்து செயற்பட்ட மஹிந்த ராஜபக்ஷ இன்று நீதிமன்ற சுவர்களில் சாய்ந்திருக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
குடும்ப அங்கத்தவர்களை பழிவாங்கக் கூடாது என மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார். என்னையும் எனது குடும்பத்தையும் துரத்தித் துரத்தி பழிவாங்கியதை மறந்துவிட்டார். இரண்டு மூன்று மாதங்கள் தனது மகன் சிறையில் இருப்பதைக் கண்டு அவர் கண் கலங்குகிறார். அவருக்குப் பயந்து எனது மருமகன் ஐந்து வருடங்கள் தலைமறைவாக இருந்தார்.
தான் ஒரு டொலராவது மோசடி செய்திருந்தால் வயிற்றை வெட்டிக்கொள்வதாக சவால் விட்டிருக்கிறார். தனது பெற்றோரின் நினைவுத் தூபிகள் அமைக்க 90 மில்லியன் ரூபா மோசடி செய்தது மட்டுமன்றி ராடா நிறுவனத்தின் ஊடாக புலிகளுக்கு 600 மில்லியன் ரூபா வழங்கியிருந்தார். எனவே தேவையான கத்தியை நான் வழங்கத் தயாராக இருக்கிறேன்.
நான் பொதுத் தேர்தலில் தோற்று தேசியப் பட்டியலின் ஊடாக பாராளுமன்றம் வந்ததையும் அவர் விமர்சித்திருக்கிறார். ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்து பாராளுமன்றத்துக்கு எம்பியாக வருவதைவிட தேர்தலில் தோற்று தேசியப்பட்டியலின் ஊடாக வருவதொன்றும் வெட்கப்படும் விடயமல்ல.