ரஞ்சிதன் குணரத்னம்

என் சகோதரர் கடத்தப்பட்டு குருநாகலில் உள்ள வேஹர முகாமில் வைக்கப்பட்டார் என்பதை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன், ஏனென்றால், நானும், என் அம்மாவும், என் தந்தையும் கைது செய்யப்பட்டு அதே முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.

என் சகோதரர் அவர்களின் காவலில் இருப்பதை இராணுவ வீரர்கள் எங்களுக்கு உறுதிப்படுத்தினர். நாங்கள் தனித்தனியாக வைக்கப்பட்டு பல முறை அவருக்குக் காட்டப்பட்டோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எங்கள் கண்கள் கட்டப்பட்டிருந்தமையால் அவரைப் பார்க்க முடியவில்லை. நிச்சயமாக அவர் எங்களைப் பார்த்திருப்பார்.

நாங்கள் அங்கு ஐந்து நாட்கள் தடுத்து வைக்கப்பட்டோம். என் அம்மா என்னை எப்படி சேலை முத்தானையால் போர்த்தி இறுக்கமாகப் பிடித்திருந்தார் என்பதை இன்னும் என்னால் நினைவில் கொள்ள முடிகிறது. நாங்கள் அனுபவித்த அந்த பீதியை வேதனையை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை.

ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக எங்கள் அன்புக்குரிய “பெரியாவை” இழந்தோம் …… உங்களையும், அனைவரும் மகிழ்ச்சியாக வாழ ஒரு சிறந்த இடத்தை உருவாக்க விரும்பிய ஆயிரக்கணக்கான அன்புக்குரியவர்களையும் நாங்கள் இழந்து நிற்கின்றோம்.

எதிர்காலத்திற்கு மிகவும் தேவையான ஆயிரக்கணக்கான சிறந்த தலைவர்களை முழு தேசமும் இழந்துவிட்டது. அவர்கள் அநீதியான முறைமைக்கு எதிராகப் போராடினார்கள், அதற்காக அவர்கள் தங்கள் உயிரைக் கொடுக்க வேண்டியிருந்தது.

நீங்கள் மரணிக்கவில்லை. உங்களின் மனவலிமைமிக்க போராட்டக்குணமும், தைரியமும் எங்களை மேலும் மேலும் வலுப்படுத்தும். என் சகோதரனுக்கு நீதி தேவை என்று நீங்கள் நினைக்கவில்லையா?

அவருக்கு மட்டுமல்ல, 87 முதல் 90 வரையிலான இருண்ட காலப்பகுதியில் தங்கள் உயிரை இழந்த அனைவருக்கும் நீதி தேவை என்று நீங்கள் நினைக்கவில்லையா? பல்வேறு சூழ்நிலைகளில் நாட்டில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி தேவை என்று நீங்கள் நினைக்கவில்லையா? …..

இனம், மொழி, வர்க்கம், பிரதேசம் என எந்தப் பாகுபாடும் இல்லாமல், கடந்த சில தசாப்தங்களாக ஆட்சியாளர்களால் காணாமலாக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும்.

நிரஞ்சனி குணரத்னம் சகோதரியின் பதிவின் தமிழாக்கம்.

Leave a Reply