ரணிலைத் தூற்றுவது சரிதானா?

அதற்கெதிரான விமர்சனங்களாக ரணிலிடம் கேள்வி கேட்பது போன்று காஸா, மியன்மார், காஷ்மீர் பிரச்சினைகள் பற்றி டிரம்ப், புட்டின், மோடி, நெத்தன்யாகு போன்றவர்களிடம் கேள்விகளைக் கேட்க முடியுமா என்ற வகையிலான கருத்துக்களும் வந்த வண்ணமிருக்கின்றன.

இது போலவே டி.டப்ளியு. தொலைக்காட்சிக்கு அவர் கொடுத்திருந்த நேர்காணலும் விமர்சனங்களைக் கொண்டுவந்திருந்தது. உலகில் அரசியல்வாதிகள் தங்களுக்குக் கிடைக்கின்ற வாய்ப்புக்களை மிகச் சரியாகப் பயன்படுத்துகின்றார்களா என்றால், அது கேள்விக்குறிகளையே தோற்றுவிக்கும்.

அது இலங்கைக்கு மாத்திரமல்ல அனைத்து நாடுகளுக்கும்இது பொதுவானதாகவே இருக்கும்.ஆட்சியிலிருந்த அரசியல்வாதிகள் யாரும் அவர்களுடைய ஆட்சிக் காலங்களில் மக்கள் எதிர்பார்த்த விடயங்களை செய்து முடித்திருக்கிறார்களா என்றால் இல்லை என்றே பதில் கிடைக்கும். அதனை நிரூபிப்பதாகவே ஒவ்வொருவருடைய ஆட்சிக்காலங்களின் பின் ஏற்பட்ட மாற்றங்களே சாட்சியாக இருக்கிறது.  

அதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஜேர்மன் என பல நாடுகளை உதாரணமும் காட்டலாம்.

இலங்கையில் இனப்பிரச்சினை தோற்றம் பெற்றதிலிருந்து பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது திட்டமிட்ட செயற்பாடுகளை மேற்கொண்டே வந்திருக்கிறார்கள்.

நாட்டுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டதன் பின்னர் தமிழர்கள் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக அக்காலங்களில் உருவான தமிழ் அரசியல்வாதிகளுக்குத் தங்களுடைய ஆதரவுகளை வழங்கினார்கள். ஆனால், ஆட்சியிலிருந்து சிங்களத் தலைவர்கள் யாரும் அந்த அரசியல்வாதிகளின் முயற்சிகளுக்குத் தீர்வை முன்வைக்கவேயில்லை. முன்வைத்தாலும் அவை சிங்கள அடிப்படைவாதிகளால் இல்லாமலாக்கப்பட்டன. 

அதற்கு டட்லி-செல்வா ஒப்பந்தம், பண்டா செல்வா ஒப்பந்தம், சந்திரிகா அம்மையாரின் இடைக்கால நிருவாக சபை, சுனாமி நிவாரணத் திட்டம், மைத்திரிபால சிறிசேன கால புதிய அரசியலமைப்பு உருவாக்கம் போன்றவற்றை அதற்கு உதாரணமும் காட்டலாம்.

ஏன்? இந்தியாவின் முழுமையான பங்குபற்றலுடன் ஏற்படுத்தப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தம், அதனால், உருவான 13ஆவது திருத்தத்தையும் கூறலாம். 13ஆவது திருத்தம் இதுவரையில் முழுமையாக அமுல்படுத்தப்படாமலிருப்பதும் மாகாண சபைகளுக்கான அதிகாரத்தை ஆளுநர்கள் வசம் வைத்திருக்கின்றமை வேறுகதை. 

அகிம்சை வழிப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட போது ஒருமித்து இருந்த தமிழ் அரசியல் தலைவர்கள் பிரிவுகளாக மாறத் தொடங்கினார்கள். அதற்கு ஒவ்வொருவரும் கைக்கொண்ட கொள்கைகள் காரணமாக இருந்தன. ஒருவர் ஒருவழியை முன்வைக்க மற்றையவர்கள் வேறு ஒரு முறையையே கையாண்டிருக்கின்றனர்.

எவ்வாறிருந்தபோதிலும், தமிழ் மக்களின் சுதந்திரமான அரசியல் உரிமைக்கான சுய நிர்ணயக் கோரிக்கைக்கு ஏற்ற தீர்வு வழங்கப்படவில்லை. அது தமிழ் அரசியல் தலைவர்கள் மீதான விமர்சனங்களையே ஏற்படுத்தியிருந்தது. இப்போதும் அவ்வாறான விமர்சனங்கள் இருந்துகொண்டே இருக்கிறது.

கடந்த தேர்தல்களில் தமிழ் மக்கள் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பக்கம் சாய்வதற்கு அதுவும் ஒரு காரணமாகும். அரசியல் ரீதியான முயற்சிகளின் இயலாமை காரணமாகவே ஆயுதப் போராட்டம் தோற்றம் பெற்றது.

அந்த ஆயுதப் போராட்டத்தின் வளர்ச்சி ஆட்சியிலிருந்த அரசியல் தலைவர்கள் அனைவரையும் அச்சம் கொள்ள வைத்திருந்தது என்பதற்கப்பால் பிரமிக்கவும் செய்திருந்தது. பிற்காலத்தில் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் பயங்கரவாதப் போராட்டமாகக் காண்பிக்கப்பட்டு இறுதியில் ஆயுத ரீதியாகவே அடக்கப்பட்டது.

இலங்கையை பொறுத்தவரையில், தமிழ் மக்களது போராட்டமானது ஒட்டு மொத்த சிங்கள மக்களுக்கு எதிரான போராட்டமாகக் காண்பிக்கப்பட்டு திசை திருப்பப்பட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இறுதி யுத்தத்தின் பின்னர் ஏதோ தமிழர்களுடைய போராட்டத்தை ஒட்டுமொத்தமாக முடிவுக்குக் கொண்டுவந்தவர்கள் மகிந்த ராஜபக்‌ஷ குடும்பத்தினரே என்றும் சொல்லப்பட்டது. அதனால்தான் இலங்கையின் ஏகபோக ராஜாவாக மகிந்த புகழாரம் சூடப்பட்டிருந்தார்.

ஆனால், சிறிது காலத்திலேயே அவர்கள் ஒன்றுமே இல்லாதவர்களாக அரசியலிலிருந்து ஒதுக்கப்பட்டிருக்கின்றனர். இறுதியில் தேசியப் பட்டியல் ஊடாக மகிந்த ராஜபக்‌ஷ குடும்பத்தின் வாரிசான நாமல் ராஜபக்‌ஷ பாராளுமன்றத்துக்குள் நுழைய வேண்டிய நிலையையும் கொண்டுவந்தது, இது சிங்கள மக்கள் தங்களுக்கிருந்த நீண்டகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த மகிந்த தரப்பினரையே மக்கள் ஒதுக்கியதையே காட்டுகிறது. 

ஒருவகையில் பார்த்தால், உலகமே பிரமிக்கும் அளவிற்கு வளர்ச்சியடைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாமல் செய்வதற்காக மிகவும் கவனமாகக் காய் நகர்த்தி நோர்வேயின் உதவியுடன் சமாதான ஒப்பந்தத்தினை மேற்கொண்டு அக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல வேலைப்பாடுகள் காரணமாகப் புலிகளுக்குள் பிளவை ஏற்படுத்தியவர் ரணில் விக்ரமசிங்க ஆவார். 

அவரது அந்த தந்திரமான கனகச்சிதமான வேலைப்பாடு ஆயுத ரீதியாக புலிகள் பலமிழக்கும் நிலையை ஏற்படுத்தியது. விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் மிகப்பெரும் பங்களிப்பைச் செய்துவந்த கிழக்கு மாகாணம், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அங்கத்தவர்களின் பங்களிப்பு குறைவதற்கு அல்லது இல்லாமல் போவதற்கு புலிகளின் பிளவு காரணமாக இருந்தது. அதனைச் செய்து முடித்தவர் ரணில் விக்ரமசிங்க ஆகும்.

ஆயுதப் போராட்டத்தின் முடிவு, அதனால் ஏற்பட்ட நாட்டின் அமைதி நிலை, இயல்பு வாழ்க்கை போன்றவற்றின் பின்னரே சிங்கள மக்கள் தங்களது மற்றைய விடயங்களைப் பற்றி சிந்திப்பதற்கான காலத்தைக் கொடுத்திருந்தது.

அதற்காக ரணிலுக்கு முன்னர் ஆட்சியிலிருந்த தலைவர்கள் தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தின் வீழ்ச்சிக்கு, விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பங்களிப்புச் செய்யவில்லை என்ற கருத்தாகாது என்பதும் இதில் கவனிக்கப்படவேண்டியது. 

இந்த இடத்தில்தான், அல்-ஜசீராவின் சமீபத்திய நேர்காணலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதிலளிப்பதில் சிரமங்களை எதிர்கொண்டதாக சிலர் கூறுகின்றனர்.

அதே நேரத்தில், பத்திரிகையாளர் புலனாய்வு அதிகாரி  போல் கேள்விகளை அடுக்கிக் கொண்டேயிருந்தார். ரணில் பதிலளிக்க நேரம் கொடுக்காமல் கதைத்து கொண்டிருந்தார். பதிலளிக்கும் நேரத்தில் இடைஞ்சல் செய்து கொண்டே இருந்தார் என்பதெல்லாம் ஒருவகையில் பார்த்தால், ரணில் ஒரு குற்றவாளியைப் போல் நடத்தப்பட்டார் என்பதாகக் கொள்ளலாம்.

உண்மையில் அவர் குற்றவாளியல்ல. இலங்கையின் பெரும்பான்மை சிங்கள மக்கள் விரும்பியதை ஏற்படுத்த அவருடைய ஆட்சி, அதிகார காலங்களில்  அவர் முயற்சியைச் செய்திருந்தார்.

ரணிலைப் பொறுத்தவரையில், இலங்கையை உலகமயமாக்கலின் சூழலுக்கேற்பவும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பவும் நகர்த்தியே வந்திருக்கிறார். நாட்டில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் மக்கள் எதிர்பார்த்த ஆட்சியொன்றை மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கி நிறைவேற்ற முன்னின்றார்.

அதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட பலர் இணைந்தே இருந்தனர். 

ஆனால், அந்த முயற்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வருகையாலும், கோட்டபாய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகி, சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆட்சிக்கு வந்ததால் கைகூடாமல் போனது. அந்த ஆட்சி முடிவுக்கு வருவதற்கு மக்கள் எதிர்பார்க்காத விடயமான இயற்கை விவசாய முறை அறிமுகம் காரணமாக இருந்தது.

மகிந்த குடும்பத்தாருக்கு அரசியலே வேண்டாமென்று ஒதுங்கவேண்டிய நிலையையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கலைத்து விட வேண்டும் என்று சிந்திக்கும் அளவிற்கு தற்போதைய நிலையையும் கொண்டுவந்திருக்கிறது.

இருந்தாலும், அந்நேரத்தில் கிடைத்த ஒரு வாய்ப்பினை பயன்படுத்தி மக்கள் எதிர்பார்க்கின்ற இலங்கையை ஏற்படுத்தவே ரணில் விக்கரமசிங்க முயற்சியை மேற்கொண்டார்.

அக்காலத்தில் அவர் மேற்கொண்டிருந்த பிரயத்தனங்கள் சாதாரணமானவையல்ல. பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்திருந்த இலங்கையை சர்வதேச அளவில் தூக்கி நிறுத்திவிடவேண்டும் என்றே அவர் அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டார். ஓரளவிற்கு அதில் வெற்றியும் கண்டார்.

அதனாலேயே அவர் இப்போதும் விமர்சிக்கப்படுகின்றார் என்றே சொல்லாம். ஒருவகையில் நாட்டில் நீண்டகாலமாக நடைபெற்றுவந்த, இலங்கையின் தேசிய செல்வத்தை அழித்து கொண்டிருந்த யுத்தத்தை நிறுத்தி அமைதியை ஏற்படுத்திய மகிந்த ராஜபக்‌ஷ குடும்பத்தினரையே ஒன்றுமில்லை என்றாக்கிய மக்கள் ரணில் விக்ரமசிங்கவை மிகச் சாதாரணமாகவே பார்ப்பர் என்பதில் தவறொன்றும் இருக்கப் போவதில்லை என்றே சொல்லாம். 

ஒரு அரச தலைவர் தன்னுடைய அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நாட்டினதும் மக்களினதும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் விமர்சிக்கப்படுவதில் தவறொன்றுமில்லை.

இருந்தாலும் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் தேவையற்ற விடயங்கள் அரசியல் நாகரீகமற்றதாகவே பார்க்கப்படவேண்டும்.

அந்தவகையிலேயே, ரணில் விக்ரமசிங்க மீது மேற்கொள்ளப்படும் அழுத்தங்கள் அவரை ஒன்றும் செய்து விடப் போவதில்ல என்பதுடன், இலங்கை அரசியலில் எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும் என்றே கொள்ளலாம்.

அதே நேரத்தில், தமிழ் மக்களின் விடயத்தில் அவர்களுடைய சுயநிர்ணய உரிமைகளுக்கான போராட்டம் மக்கள் விடுதலை முன்னணியைத் தலைமையாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியிலும், வேறு ஒரு கோணத்தில் அணுகப்படாமலிருப்பதும் இதுபோன்றதொரு நிலையே என்பதும் மறைப்பதற்கில்லை.

Leave a Reply