இந்நிலையில் அண்மைக்காலமாக உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து வருவதால் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.
இதனையடுத்து உக்ரைனின் மீது ரஷ்யா படையெடுப்பு நடத்தினால் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடை விதிக்கப்படும் என ஜி-7 நாடுகள் எச்சரித்துள்ளன.
இது குறித்து ஜி- 7 நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பானை ஆகியவற்றின் வெளியுறவு துறை அமைச்சர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ” ஜி- 7 நாடுகள் இணைந்து தடை விதிப்பதன் மூலம் ரஷ்யாவின் பொருளாதாரம் நிலைகுலைந்து போகும் ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உக்ரைனின் இறையாண்மை, எல்லை பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்டவற்றை காக்க சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உறுதி பூண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காணாமல், உக்ரைன் மீது போர் தொடுத்தால், ரஷ்யா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.