இத்தாலியத் தலைநகர் றோமிலுள்ள கார்த் தரிப்பிடமொன்றிலேயே கப்டனும், ரஷ்யத் தூதரகப் பணியாளர் உறுப்பினரொருவரும் கைது செய்யப்பட்டதாகவும், உளவு பார்த்தல் மற்றும் அரச பாதுகாப்புடன் தொடர்புடைய மோசமான குற்றச்சாட்டுகளுக்கு, நேற்று முன்தினமிரவு இவர்கள் சந்தித்த பின்னர் உள்ளாவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேகநபர்கள் உத்தியோகபூர்வமாக அடையாளங் காணப்படாத நிலையில், வோல்டர் பியொட் எனப்படும் கப்டன், தகவலுக்காக 5,000 யூரோக்களை ஏற்றுக் கொண்டதாக பொலிஸ் தகவல் மூலமொன்று தெரிவித்துள்ளது.
கையளிக்கப்பட்ட கோப்புக்களில், வட அத்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) ஆவணங்களும் உள்ளடங்குவதாக அன்ஸா செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உடனடியாக ரஷ்யத் தூதுவர் சேர்ஜி றஸோவ்வை அழைத்த இத்தாலி, இதில் பங்கெடுத்ததாக நம்பப்படும் இரண்டு ரஷ்ய அதிகாரிகளை வெளியேற்றியுள்ளது.
குறித்த கப்டன், தேசிய பாதுகாப்பு கொள்கையை உருவாக்கும், இத்தாலியுடனான நட்புறவு நாடுகளுடான உறவுகளை முகாமைத்துவம் செய்யும் பாதுகாப்பமைச்சின் திணைக்களத்தில் பணியாற்றுவதாக, அமைச்சரவைத் தகவல் மூலமொன்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வெளியேற்றப்பட்டவர்கள் தூதரகத்தின் இராணுவப் பிரிவில் பணியாற்றுவதாக தூதரகத்தை மேற்கோள்காட்டி ரஷ்ய செய்தி முகவரகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.