தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராகுல் காந்தியின் கோரிக்கையை குஜராத் உயர்நீதிமன்றம் இன்று(வெள்ளிக்கிழமை) நிராகரித்தது. உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ராகுல் காந்திக்கும், 2024 தேர்தலுக்கு தயாராகி வரும் காங்கிரஸ் கட்சிக்கும் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
கடந்த 2019-இல் கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ‘‘எல்லா திருடர்களுக்கும் மோடி எனப் பெயர் வந்தது எப்படி?” என்று விமர்சித்தார். இது தொடர்பாக குஜராத் பாஜக எம்எல்ஏ பர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இதில் ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, ராகுலின் எம்.பி. பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டது.
இதையடுத்து, சிறை தண்டனைக்கு தடை கோரி ராகுல் காந்தி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, “ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை காரணமாக, அவர் எம்பி பதவியில் இருந்து தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளார். இந்த தண்டனைக்கு தடை உத்தரவு பிறப்பிக்காவிட்டால், அது ராகுல் காந்திக்கும், அவரைத் தேர்வு செய்த பாராளுமன்ற தொகுதிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று வாதிடப்பட்டது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்றம், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும், இந்த வழக்கில், நீதிமன்றத்தின் கோடைகால விடுமுறைக்குப் பின்னர் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று உத்தரவிடப்பட்டது.