மியான்மாரில், சிறுபான்மை முஸ்லிம் இனக்குழுவான றோகிஞ்சாக்கள் வாழும் ராக்கைன் மாநிலத்தில், பாதுகாப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுவருவதாகக் கூறப்படும் படுகொலைகளையும் குற்றங்களையும் மூடிமறைப்பதற்கு, மியான்மார் அரசாங்கம் முயல்வதாக, மனித உரிமைகள் அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
ராக்கைன் மாநிலத்தில் இடம்பெற்றுவரும் பாதுகாப்பு நடவடிக்கைகள், இனவழிப்பு நடவடிக்கைகளாகக் கருதப்பட முடியுமென்ற குற்றச்சாட்டுகள், ஐ.நா தொடக்கம் சிவில் சமூக அமைப்புகள் வரையில், பல்வேறு மட்டங்களிலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிப்பதற்காக, நொபெல் பரிசு வென்ற ஆங் சாங் சூகியின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவொன்று, “அரசாங்கத்தின் நடவடிக்கை, இனவொழிப்புக்கு சமனாக அமையும்” என்ற குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது.
ராக்கைன் மாநிலத்தில் அமைந்துள்ள மௌங்டோவ் பிராந்தியத்தில் றோகிஞ்சா சனத்தொகை அதிகரித்து வருதல், ராக்கைனில் மௌலவிகளினதும் பள்ளிவாசல்களினதும் சமயசார் நிறுவனங்களினதும் எண்ணிக்கை அதிகரித்து வருதல் ஆகியவற்றை, இனவொழிப்பு இடம்பெறவில்லை என்பதற்காக காரணமாக, அக்குழு அறிவித்திருந்தது.
எனினும், இதை நிராகரித்துள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவுக்கான பிரதிப் பணிப்பாளர் பில் றொபேர்ட்ஸன், “இந்தக் குழுவானது, ஏற்கெனவே அஞ்சப்பட்டது போன்று, அரசாங்கத்தின் வெள்ளையடிப்புச் செயற்பாடு போலவே தொடர்ந்தும் காணப்பட்டு வருகிறது. பள்ளிவாசல்கள் காணப்படுவதால், பாகுபாடான முறையில் றோகிஞ்சா மக்கள் நடத்தப்படவில்லை என்று தெரிவிப்பது, வியக்க வைப்பதாக உள்ளது” என்று தெரிவித்தார்.