நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பணிப்பெண்ணாக இருந்த மற்றுமொரு பெண் ஒருவரே இவ்வாறு வன்புணர்வுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் கூறினார்.
முன்னாள் அமைச்சரான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பு இல்லத்தில் பணிப்பெண்ணாக வேலைச்செய்தபோது, தலவாக்கலை- டயகமவைச் சேர்ந்த 16 வயதான சிறுமி எரிகாயங்களுக்கு உள்ளாகி பின்னர் மரணமடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் 20 வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், குறித்த சிறுமிக்கு முன்னதாக அங்கு இரண்டு பெண்கள் பணிபுரிந்துள்ளதாகக் கூறினார்.
அவர்கள் இருவரையும் தரகரான டயகம பிரதேசத்தைச் சேர்ந்த பொன்னையா பண்டாரம் என்பவர் அழைத்து வந்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், அந்த பணிப்பெண்களில் ஒருவரின் தற்போதைய வயது 22 என்றும் மற்றையவரின் வயது 30 என்றும் குறிப்பிட்டார்.
டயகம பகுதியில் வசிக்கும் 22 வயது யுவதி, 2015 – 2019 காலப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்துள்ளார்.
அதன்போது, நபர் ஒருவரால் இரண்டு முறை பாலியன் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டாக யுவதி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இது தொடர்பான விசாரணையில் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரனான மதவாச்சி பகுதியை சேர்ந்த 44 வயதுடைய செயாப்தீன் ஷ்மதீன் என்ற நபரே வன்புர்ணவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து, விசாரணை அதிகாரிகளால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
டயகம சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகளுக்கு புறம்பாக இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பேச்சாளர், முன்னாள் அமைச்சரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து குறித்த யுவதி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டார்.
இதேவேளை, வீட்டில் பணிபுரிந்த டயகம சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரிஷாட்டின் மனைவியான ஷெஹாப்தீன் ஆயிஷா (46), மனைவியின் தந்தையான மொஹமட் ஷெஹாப்தீன் (70) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.
அத்துடன் சிறுமியை கொழும்புக்கு அழைத்துவந்து பணிக்கு அமர்த்திய தரகரான டயகம பிரதேசத்தைச் சேர்ந்த பொன்னையா பண்டாரம் அல்லது சங்கர் எனப்படும் 64 வயதான நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சந்தேக நபர்களை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.