அதில் அவர் கூறியதாவது: மே 19இல் விருதுநகர் அரச மருத்துவக் கல்லூரி பீடாதிபதியாக பொறுப்பேற்றேன். முன்னதாக கன்னியாகுமரி மாவட்ட அரச மருத்துவக் கல்லூரி பீடாதிபதியாக பணியாற்றினேன். மே 18 மாலையில் கன்னியாகுமரியிலிருந்து இடமாற்றம் வந்தது. இரவில் மதுரை அழகர்கோவிலில் உள்ள வீட்டுக்கு வந்து தங்கி மறுநாள் காலை பணியில் சேர்ந்தேன். விருதுநகரில் குடியிருப்பு வசதி இல்லாததால் மாலை 4:00 மணிக்கு எனது வீட்டுக்கு வந்தேன். மாலை 5:29 மணிக்கு தொலைபேசியில் அழைத்த நிலைய மருத்துவ அலுவலர் டொக்டர் அரவிந்த், ‘ஆளுனர் என்னை சந்திக்க வேண்டும்’ என கூறியதாக கூறினார்.
மாலை 5:31 மணிக்கு ஆளுனரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது ‘அவசர சந்திப்பா அல்லது பேரிடர் மேலாண்மை குறித்து பேசவேண்டுமா’ எனக் கேட்டேன். ‘பணியில் சேர்ந்த அன்று மரியாதை நிமித்தம் தன்னை சந்திக்க வேண்டும்’ என ஆளுனர் தெரிவித்தார்.
மதுரையில் இருப்பதாலும், சாரதி வீடு திரும்பியதாலும் தொடர் மழை பெய்ததாலும் மறுநாள் வந்து சந்திப்பாக ஆளுனரிடம் கூறினேன். நிலைய மருத்துவ அலுவலர், ஆளுனர் அலுவலகத்தில் இருப்பதால் ஏதாவது அவசரம் என்றால் உடனடியாக தொடர்பு கொள்வார் என்றும் கூறினேன். ஆனால் இரவு 8:00 மணிக்கு, மரியாதை நிமித்தம் தன்னை சந்திக்க வேண்டுமென ஆளுனர் கட்டாயமாக வற்புறுத்தினார். உயர் நீதிமன்றத்தில் சட்டதரணியாக பணிபுரியும் எனது கணவர் ஆளுனரிடம் பேசிய போது, ‘அவசரப் பணி என்றால் நானே காரில் அழைத்து வருகிறேன். மரியாதை சந்திப்பு என்றால் மறுநாள் வந்து சந்திப்பார்’ என்று கூறியுள்ளார்.
மறுநாள் (மே 20) காலையில் மருத்துவமனையில் முக்கிய விசாரணையில் ஈடுபட்டதால் அந்த பணி முடிந்ததும் ஆளுனரை சந்திக்க முடிவு செய்தேன். ஆனால் ஆளுனர் அலுவலகத்தில் இருந்து வந்த நபர் என்னிடம் கடிதமொன்றை கொடுத்தார். அதில் ‘சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் 3:00 மணிக்கு நடத்திய வீடியோ கொன்பரண்ஸில் கலந்து கொள்ளாததற்காக உங்கள் மேல் ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது’ என குறிப்பிடப்பட்டிருந்தது.
மே 19 மாலை 4:00 மணி வரை மருத்துவமனையில் இருந்த போது வீடியோ கொன்பரண்ஸ் நடப்பதாக எந்த தகவலும் வரவில்லை. இதுதொடர்பாக ஆளுனர் எனக்கு தொலைபேசியில் தெரிவிக்கவும் இல்லை. விதி 18 ன் படி அரச பணியாளர் நடத்தை விதிகளை நான் மீறியதாக எப்படி சொல்ல முடியும்.
பேசிய போது என் கணவர் மிரட்டியதாக ஆளுனர் தெரிவித்துள்ளார். என் கணவர் ஆளுனரிடம் மிகவும் மதிப்பளித்தே பேசினார். மறைமுக மிரட்டலோ அரசியல் செல்வாக்கு இருப்பதாகவோ தெரிவிக்கவில்லை. அவசரப்பணி என்றால் காரில் வருவதாக கணவர் கூறினார். அவசரப்பணி அல்லது பேரிடர் மேலாண்மை என எதையும் ஆளுனர் கூறவில்லை.