ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான இராணுவக் கூட்டணி, சிரியாவின் றக்கா நகரத்தை, பூமியிலிருந்தே இல்லாதுசெய்து விட்டது என, ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. 1945ஆம் ஆண்டில், ஜேர்மனியின் ட்ரெஸ்டெனை, ஐக்கிய அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து குண்டுத் தாக்குதல் நடத்தித் தகர்த்ததைப் போன்றே றக்காவும் தகர்க்கப்பட்டுள்ளது என, ரஷ்யா தெரிவித்துள்ளது.
சிரியாவின் றக்கா நகரத்தை, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகளிடமிருந்து கைப்பற்றிவிட்டதாக, ஐக்கிய அமெரிக்காவால் ஆதரவளிக்கப்படும் சிரிய ஜனநாயகப் படைகள், கடந்த வெள்ளிக்கிழமை, உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தன.
சிரியாவில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுக்கு எதிரான மோதலில், ஐ.அமெரிக்கா தலைமையிலான கூட்டணி ஒரு பக்கமாகவும், சிரிய அரசாங்கமும் ரஷ்யாவும் தலைமைதாங்கும் இன்னொரு கூட்டணி மறுபக்கமாகவும் செயற்பட்டு வருகின்றன. இந்நிலையிலேயே, ஐ.அமெரிக்கக் கூட்டணியின் வெற்றியைத் தொடர்ந்து, ரஷ்யாவின் குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது.
றக்கா தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் மேஜர் ஜெனரல் இகோர் கொஷென்கோவ், சிரிய முரண்பாட்டுக்கு முன்னர், றக்காவில் 200,000 பேர் காணப்பட்டனர் எனவும், தற்போது 45,000 பேரே காணப்படுகின்றனர் எனவும் தெரிவித்தார்.
ரஷ்யாவின் சார்பில் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படும் போது, பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு, செயற்பாட்டாளர்களாலும் மேற்கத்தேய அரசியல்வாதிகளாலும் தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் போதெல்லாம் அவற்றை மறுக்கும் ரஷ்யா, தற்போது றக்கா மோதலில், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர் எனக் கூறுகிறது. மேற்கத்தேயத்தின் குற்றங்களை மறைப்பதற்கு, றக்காவுக்கு நிதியுதவிகளை வழங்குவதற்கு, மேற்கத்தேயம் முயல்கிறது எனவும், அவர் தெரிவித்தார்.