அதிக வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புக்களை கீழ்க் கண்டவாறு வகைப்படுத்தலாம். வெப்பத்தால் ஏற்படும் பிடிப்புக்கள் பயிற்சிகளின் போது வெப்பத்தால் தசைகளில் ஏற்படும் வலி, தசை இறுக்கம். கை, கால் வயிற்றுப் பகுதிகளில் இடம்பெறலாம்.
உடல் இயக்கங்களில் ஈடுபடுவதை விடுத்துக் குளிர்ச்சியான இடத்தில் போதுமான ஓய்வு எடுப்பதன் ஊடாகவும், போதுமான நீரைப் பருகுவதன் ஊடாகவும் இதனைத் தவிர்க்கலாம்.
தவிர்க்க வேண்டியவைவெப்பத்தால் ஏற்படும் அதிக சோர்வு – அதிக வெப்பம் காரணமாக ஏற்படும் அதிக சோர்வு. அதிக வியர்வை, அதிக உடற் சோர்வு காரணமாக மயக்கம் ஏற்படலாம். உடல் இயக்கங்களில் ஈடுபடுவதை விடுத்துக் குளிர்ச்சி யான இடத்தில் போதுமான ஓய்வு எடுக்க வேண்டும்.
போதுமான நீரை ( 15 நிமிடத்து்ககு ஒரு தடவை அரைக் கிளாஸ் நீர்) பருக வேண்டும். உடலைக் குளிர் நீரால் துடைக்க வேண்டும்.
அதிக வெப்பத்தால் ஏற்படும் உடல் அதிர்ச்சி – அதிக வெப்பத் தாக்கம் காரணமாக உடல் வெப்ப நிலையைச் சீராகப் பேண முடியாத அதிர்ச்சி. உடல் வெப்பநிலை அதிகரித்தல், இதயத் துடிப்பு விகிதம், சுவாச விகிதம் அதிகரித்தல், மனக் குழப்பம், தலைவலி, வலிப்பு, மயக்க நிலை என்பன ஏற்படும்.
பாதிப்படைந்தவரைக் குளிர்ச்சியான இடத்துக்கு மாற்றல், இறுக்கமான ஆடைகளைத் தளர்த்தல், உடலைக் குளிர்ந்த நீரால் துடைத்தல், தேவை எனில் 1990 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி நோயாளர் காவு வண்டியை அழைத்து அவசர மருத்துவ உதவி வழங்க ஏற்பாடு செய்தல் ஆகியவற்றின் மூலம் இவற்றைத் தவிர்க்க முடியும்.
பாடசாலைகளில் பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்றுவதன் ஊடாக இடர்களைத் தவிர்க்க முடியும்.பாடசாலைகளில் மாணவர்கள் வெளியிடங்களில், விளையாட்டு மைதானங்களில் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும். இடைவேளையின் போதும் ஏனைய சந்தர்ப்பங்களின் போதும் மாணவர்கள் வெயிலில் அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
மாணவர்கள் நீர் பருகுவதற்கும், ஓய்வு எடுப்பதற்கும் வசதியாக 2 மேலதிகமான இடைவேளையை ஏற்பாடு செய்தல். வெயிலில் காணப்படும்போது அதிக வெப்பத் தாக்கத்தைத் தவிர்ப்பதற்காக பாடசாலையிலும், வீட்டிலும் மாணவர்களைத் தேவையின்றி வெளியே அழைத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
அதிக வெப்பமான காலத்தில் பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிகளையும், விளையாட்டுப் பயிற்சிகளையும் தவிர்க்க வேண்டும்.
வசதிகளை ஏற்படுத்தல்
போதுமான குடி தண்ணீரை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதுடன், வழமையை விட அதிகளவான நீரைப் பருகுவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும்.
பாடசாலைகளில் போதுமான குடி தண்ணீர் வசதி இல்லாதவிடத்து, தேவையான குடி தண்ணீரை வழங்க மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக மாவட்டச் செயலரின் உதவியுடன், மாவட்ட இடர் முகாமைத்துவ இணைப்பாளரின் உதவியைப் பெறலாம்.
போதுமான காற்றோட்ட வசதிகளை வகுப்பறைகளில் ஏற்படுத்த வேண்டும். மின் விசிறியை உபயோகிக்க வேண்டி இருப்பின் காற்றோட்டத்தை உறுதிப்படுத்தக் கதவுகள், யன்னல்களை முற்றாகத் திறக்க வேண்டும். அடுக்கு மாடிகள், தகரத் தகடுகளால் உருவாக்கப்பட்ட வகுப்பறைகளைப் போதுமான நிழலுள்ள, காற்றோட்டமுள்ள வகுப்பறைகளுக்குத் தற்காலிகமாக இடமாற்ற வேண்டும்.
சிறப்பு ஆயத்தங்கள்
கழுத்துப் பட்டி அணிவதைத் தவிர்ப்பதுடன், இயலுமானவரை இடுப்புப் பட்டி அணிவதையும் தவிர்க்க வேண்டும். வெளியிடங்களுக்குச் செல்லும்போது தொப்பியை அணிந்து அல்லது குடை பிடித்துச் செல்ல வேண்டும்.கறுப்பு நிற ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும். வழமையை விட அதிக நீரைப் பருக வேண்டும்.
நீருக்குப் பதிலாக இளநீரைப் பருகலாம். அதிக சீனியை உள்ளடங்கிய காற்றடைத்த பானங்களைப் பருகுவதைத் தவிர்க்க வேண்டும்.மாணவர் ஒருவரின் உடல் நலம் பாதிக்கப்பட்ட அறிகுறியை அவதானிக்குமிடத்து, உடனடியாக ஆசிரியருக்கோ அல்லது வயது வந்த நபர் ஒருவருக்கோ தெரியப்படுத்துவதுடன் உடனடியாக மருத்துவ சேவைகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் குறித்த அறிவுறுத்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-uthayakumar ganeshalingam