வடக்கு, கிழக்கு மாகாணங்கள் யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளெனத் தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன், வடக்கு மாகாணத்துக்கு என்று ஒரு தனியான அமைச்சு உள்ள போதும், கிழக்கு மாகாணத்துக்கு அவ்வாறானதோர் அமைச்சு இல்லையெனக் குற்றஞ்சாட்டினார்.“கிராம சக்தி” மக்கள் சங்கத்தின் உட்கட்டமைப்பு வேலைத் திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரெட்னம் தலைமையில் ஏறாவூர் ஐந்தாம் குறிச்சியில் நேற்று முன்தினம் (20) நடைபெற்றது.
இங்கு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 1990 ஆண்டுகளில் நடைபெற்ற வன்செயல்களில் மிகவும் மேசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏறாவூர், நான்காம், ஐந்தாம் குறிச்சி மிக முக்கியமானதாகுமெனத் தெரிவித்தார்.
இந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்து, அகதி முகாம்களில் இருந்து, சொந்த இடங்களுக்கு திருப்பிய போது, எந்த வித அடிப்படை வசதிகளும் இன்றி இருந்தார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், ஏறாவூர் நகருக்குள் ஏறாவூர் நான்காம், ஐந்தாம் குறிச்சி கிராமங்கள் இருந்தாலும் உட்கட்டமைப்பு சார்ந்த வசதிகளில் முஸ்லிம், தமிழ் கிராமங்கள் மலை மடு போன்று காட்சிகளிப்பதாகவும் வீடற்ற, மலசல கூடம் இல்லாத, செப்பனிடப்படாத வீதிகள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் இங்கு நிலவுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், மட்டக்களப்பு மாவட்டதில் 36 ஆயிரம் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள் உள்ளனர் என்றும் இவ்வாறு கிழக்கு மாகாணத்திலும் பல்வேறுபட்ட தேவைப்பாடுகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.