“இந்த நாட்டில் மீண்டும் ஆயுதப்போராட்டம் இடம்பெறுவதற்கு நாம் விரும்பவில்லை. இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை வெறுங்கையுடன் வடக்கு, கிழக்குக்கு அனுப்பிவிடாதீர்கள். அப்படி அனுப்பினால் வரலாறு உங்களை மன்னிக்காது” என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
புதிய அரசமைப்புக்கான அரசமைப்புச் சபை வழிப்படுத்தல் குழு இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம், அரசமைப்பு சபையில் நேற்று (02) நான்காவது நாளாகவும் இடம்பெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“தேசிய ஒற்றுமைக்கு ஏற்பட்டுள்ள சவாலை முறியடிக்கவே புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டியுள்ளது. இந்த நாட்டில் அதிகாரப் பகிர்வு என்பது கட்டாயம் அவசியமானதாகும். நிறைவேற்று அதிகாரத்தை முற்றாக இல்லாதொழிக்க நாங்கள் இணங்கவில்லை. நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறவேண்டிய ஜனாதிபதி முறைமை அவசியம் என்பதையும் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்” என்றார்.
“தமிழ் – சிங்கள மக்களிடையே பிரச்சினை உள்ளது. அது எவ்வாறான பிரச்சினை என்றால், தமிழர்கள், அவர்களுக்கென்று நாடொன்றைக் கோருகிறார்கள், அவர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தப் போகிறார்கள் என சிங்களவர்கள் நினைக்கிறார்கள். இதேவேளை, எமது நாட்டில் எமக்கு உரிய உரிமை வழங்கப்படுவதில்லை. நாம் இரண்டாம் மூன்றாம் பட்சமாகவே பார்க்கப்படுகின்றோம். எங்களை ஏமாற்றுகிறார்களோ என்ற சந்தேகம் உள்ளது என தமிழர்கள் நினைக்கிறார்கள்” என்றும் தெளிவுபடுத்தினார்.
“இங்கே, சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதால் நாட்டுக்கு ஒரு செய்தி சொல்லியிருக்கிறார். அதாவது, வடக்கு, கிழக்கு மக்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்துக்கு வந்து, நாட்டைப் பிளவுபடுத்தாமல் அரசாங்கத்தோடு இணைந்திருந்து தீர்வு காண முயற்சிப்பதாக அவர் செய்தி சொல்லியிருக்கின்றார்.
“இது வடக்கு மக்களுக்கும் தெற்கு மக்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாகும். ஒருமித்த, பிளவுபடாத நாட்டுக்குள் தீர்வு என்பதை சம்பந்தன் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்திருக்கிறார்”என்றார்.
“நான் ஒன்றை இங்கே சொல்லி வைக்க விரும்புகிறேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை வெறுங்கையுடன் வடக்கு, கிழக்குக்கு அனுப்பிவிடாதீர்கள். அப்படி அனுப்பினால் வரலாறு உங்களை மன்னிக்காது.
“தந்தை செல்வா, தனது இறுதிக்காலத்தில் தமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் எனக் கூறியிருக்கிறார். இப்போது சம்பந்தன், வடக்குக்குச் சென்று, இந்த நாட்டையே கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் எனச் சொல்லும் அளவுக்கு நடந்துகொள்ள வேண்டாம். இதனை நான் இங்குள்ள அனைத்துக் கட்சிகளிடமும் கோரிக்கையாக முன்வைக்கிறேன்.
“எமக்கும் சில கட்சிகள் முன்வைத்துள்ள யோசனைகள் தொடர்பில் முரண்பாடுகள் உண்டு. ஆனால், அவற்றை கலந்துரையாடல்களின் மூலம் தீர்த்துக்கொள்ளவே முயற்சிக்கின்றோம்” என்றும் அவர் குறிப்பிட்டார். “தெற்கில் உள்ள ஒருசிலர் இதனை சிங்கள நாடு என்று சொல்ல முடியுமானால், வடக்கில் உள்ள தமிழர்களுக்கு இது எமது பிரதேசம் என்று சொல்லக் கூடிய உரிமை உண்டு.
“இந்த நாட்டில் மீண்டும் ஆயுதப்போராட்டம் இடம்பெறுவதற்கு நாம் விரும்பவில்லை. இங்கே சிலர், அரசியல் இலாபம் கருதி இனவாதமாகப் பேசி, தவறான கருத்துகளைப் பரப்புகின்றார்கள். இடைக்கால அறிக்கை, சட்டமாக்கப்படுவதாக தெற்கில் பரப்புரை செய்கிறார்கள். வடக்கில் தனியான இராச்சியம் உருவாகுவதற்கான வியூகம் வகுக்கப்படுவதாக அவர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள், சிறுபிள்ளைகள் போல நடந்துகொள்வது வேடிக்கையாக இருக்கிறது.
தயவுசெய்து நாட்டுக்குத் தீ வைக்க முயற்சிக்க வேண்டாம் என நான் அவர்களிடம் கூறி வைக்க விரும்புகிறேன். வடக்கில் இப்போது உள்ள சிறு அடிப்படைவாதம் பெரிதாகுவதற்கு இடம் ஏற்படுத்திக் கொடுக்காதீர்கள்” என்றார்.