மத்திய அரசாங்கத்துடன் வடக்கு மாகாணசபை, ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று இந்தியாவும் மேற்குலகமும், அழுத்தங்களைக் கொடுத்திருப்பதாக கொழும்பு வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாணசபை தனித்துச் செயற்படுவதை விரும்பத்தக்க விடயமல்ல என்று, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு, இந்திய, அமெரிக்க மற்றும் மேற்குலக இராஜதந்திரிகள் எடுத்துக் கூறியுள்ளனர். அண்மைக்காலங்களில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகள், நிலைமைகளை ஆராய்ந்த பின்னரே, வடக்கு மாகாண முதலமைச்சரிடம் தமது நிலைப்பாட்டை எடுத்துக் கூறியுள்ளனர்.
இதையடுத்தே, வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக, மாதம் தோறும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடும் நடைமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அரச பொறிமுறையின் பிரகாரம் மத்திய அரசாங்கத்துடன் ஒன்றித்து பயணிக்க வேண்டும் என்று வட மாகாண சபைக்கு அனைத்துலக சமூகம் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கொழும்பு வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.