“வடமாகாண சபையின் நிர்வாகத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பொறுப்பில்லை எனக் கூறமுடியாது. எனினும் வடமாகாண சபை, வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் அசமந்தப் போக்கைக் காட்டுகிறது” என, நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம். ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
‘வடக்கு முஸ்லிம்களுக்கும் தீர்வு அவசியம்’ எனும் கருப்பொருளில், வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 26ஆவது ஆண்டு நிறைவின் நினைவாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) நடத்தப்பட்ட விசேட சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது,
“வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமையை தமிழ் மக்களின் ஜனநாயகப் பிரதிநிதிகளும் கண்டித்திருக்கின்றனர். அது, சர்வதேசக் குற்றம் என்பது மறுக்க முடியாத உண்மை. எனினும், அதைச் சொல்கின்றபோது, சிலருக்கு சங்கடம் ஏற்படுகிறது.
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை இனச்சுத்திகரிப்பு என்றால், தமிழ் மக்களுக்கு நடந்தது இனப்படுகொலையா? ஏனக் கேட்கின்றனர். ஆம் என்றுதான் கூறியிருக்கிறேன். எனினும், இனப்படுகொலை என முஸ்லிம் தலைவர்கள் சொல்லவில்லை என தமிழர்கள் கேட்கின்றனர்.
மீள்குடியேற்றத்தில் அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை இனப்பிரச்சினைக்கான தீர்வு முழுமையாக வரும்வரை அமைச்சுப் பதவிகளை எடுக்கமாட்டோம். இதனால் தமிழ் மக்களில் மீள்குடியேற்றம் பற்றிப் பேசுவதிலும் சில சிக்கல்கள் காணப்படுகின்றன.
வடமாகாண சபை, வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் அசமந்தப் போக்கைக் காட்டுகிறது. முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தைப் போலவே, தமிழ் மக்களின் மீள்குடியேற்றமும் பின்தங்கும் என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும்.
எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கும் இரு இனங்கள் ஒன்று சேர்ந்து கேட்டால், கேட்டது கிடைக்கும். தனி இனத்துக்கு சலுகைகள் பெற முயன்றால் எதுமே கிடைக்காது.
சமஷ்ட்டி முறையை வடக்கு முஸ்லிம்கள் ஏற்கின்றபோதும், மன்னார் மாவட்ட அமைச்சர் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார். அரசாங்கத்தை மகிழ்வூட்டவா? அவர்கள் இதனைச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்?
சமஷ்டி, ஆட்சியதிகாரங்கள் பகிரப்படும் முறை, கொடுக்கும் அதிகாரம் திருப்பி எடுக்க முடியாததாக இருக்கவேண்டும். அரசியலமைப்பின் முதலாவது வரைவு ஏற்படுத்தப்படவுள்ள நிலையில், இவ்வாறு நடந்து கொள்வது முறையல்ல” என அவர், மேலும் தெரிவித்தார்.