வேலையற்ற பட்டதாரிகளுக்குரிய நியமனங்களை வழங்குமாறு வலியுறுத்தி, வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தால் நாளை மறுதினம் (15) காலை 9 மணிக்கு, யாழ். மாவட்ட செயலகம் முன்னால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பில், வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் கருத்துத் தெரிவிக்கையில், “எம்மால் முன்னெடுக்கப்பட்ட தொடர்ச்சியான 143ஆவது நாள் போராட்டத்தில், பட்டதாரிகளை பயிற்சி அடிப்படையில் அபிவிருத்தி உதவியாளராக இந்த வருடத்துக்குள் நியமிப்பதாக குறிப்பிடப்பட்டது. அதன் பொருட்டு எமது போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், இதுவரை எவ்வித நியமனங்களையும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை. இதனாலேயே இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது” என்றனர்.
“இப்போராட்டத்தின் போது, பட்டதாரிகளின் கையெழுத்துகள் உள்ளடங்கிய மகஜர்கள், முதலமைச்சர், ஆளுநர், அரசாங்க அதிபர் ஆகியோரூடாக பிரதமரிடம் கையளிக்கப்படவுள்ளன. அத்தோடு, ஊடகங்களுக்கும் அறிக்கை வழங்கப்படவுள்ளது.
“எனவே, அனைத்துப் பட்டதாரிகளும் வருகை தந்து, போரட்டத்தைப் பலப்படுத்துவதோடு, அவர்களின் பெயர் விவரங்களையும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என, அவர்கள் மேலும் தெரிவித்தனர்.