தொடர்ச்சியாகப் பெய்து வரும் பெருமழையினால் வன்னிப்பகுதியில் பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எங்கள் வீட்டுக்கு வரும்பாதை முழுமையாகச் சேதமடைந்திருக்கிறது. நாங்கள் இப்பொழுது வளவுகளுக்குள்ளால்தான் போய் வருகிறோம். வண்டி, வாகனங்கள் எதுவும் வர முடியாது. இப்படித்தான் பெரும்பாலான உள்வீதிகள் சேதமாகியிருக்கின்றன. பலவும் சேறாகி விட்டன.
வன்னியின் உள்வீதிகள் புனரமைக்கப்படாமல் 40 வருசங்களுக்கு மேலாகி விட்டன. பல வீதிகள் ஒரு தடவை கூட நிர்மாணிக்கப்படாமல் அபபடியே மக்களால் உருவாக்கப்பட்ட நிலையில் உள்ளன. இது பட்ஜெற் காலம். இந்த வீதிகளின் புனரமைப்புக்கு போதிய நிதியைக் கோர வேண்டும். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு பாதுகாப்புக்காக மிக அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இருந்தும் இதை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரித்திருக்கிறது. இதைக்குறித்த விமர்சங்களை இங்கே எழுப்புவது எனது நோக்கமல்ல. அதை இன்னொரு இடத்தில் பார்க்கலாம். பதிலாக வன்னி மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்வீதிப் புனரமைப்புக்கெனத் தனியான நிதி அல்லது கூடுதல் நிதி ஒதுக்கீட்டைக் கோர வேண்டும். அதைப்போல வடக்குக் கிழக்கு மாகாணசபைகளும் இது விடயத்தில் கவனம் கொள்வது அவசியம்.
இது வெள்ளத்தினால் ஏற்பட்ட அழிவின் பின் சிந்திக்கப்படும் விடயமல்ல. மக்களின் அன்றாட வாழ்வுடன், எதிர்கால முன்னேற்றத்துடன் சம்மந்தப்பட்டதாகும். பிள்ளைகள் பாடசாலைக்குப் போவதற்கும் மக்கள் நடமாடுவதற்கும் பொருட்களை சுலபமாகக் கொண்டு செல்வதற்கும் பிற நாளாந்த நடவடிக்கைகளும் வீதிகளின் மூலமாகவே நடக்கின்றன. வீதியில்லாமல் எதுவுமே சாத்தியமில்லை.
பிரதான வீதிகள் கடந்த காலத்தில் மிகச் செம்மையாகப் புனரமைக்கப்பட்டதால் தொலைதூரப்பயணங்கள் தொடர்ந்து நடக்கின்றன.
எனினும் புநகரி – மன்னார் வீதியினூடான போக்குவரத்து நெருக்கடியாகியுள்ளது. மண்டைக்கண்ணாறு, பாலியாறு, அருவியாறு போன்றவை பெருக்கெடுத்து பாதையை மேவிப்பாய்கின்றன. வீதி செம்மையாக இருந்தாலும் பாலங்களின் வேலைகள் முடிவடையாத காரணத்தினால் போக்குவரத்து நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. ஆகவே இந்தப் பகுதிகளில் படையினர் படகுச் சேவையை நடத்துகிறார்கள்.
முன்னர் கேரதீவு – சங்குப்பிட்டிக்குத்தான் இப்படிப் படகுச் சேவை நடந்தது. இப்பொழுது இது இடம்மாறியிருக்கிறது.
(Sivarasa Karunagaran)