சோவியத் பக்கம்தான் இணைவார்கள் என்று கருதப்பட்ட சில நாட்டுத் தலைவர்கள் – “ரெண்டு பக்கமும் நாங்களில்லை ; அணிசேரா நாடுகள் NAM என்று தனியே நிற்கிறோம்” என்று ராஜதந்திரமாக முடிவெடுக்கிறார்கள்.
எச்சூழலிலும் ஒரு பக்கம் சாய்ந்திருப்பது – ராணுவ பொருளாதாரப் போட்டிகளில் மாட்டிக்கொள்வது – தனித்தன்மைக்கு ஊறுவிளைக்குமென்று உணர்ந்த மாபெரும் தலைவர்கள் அவர்கள்.
மார்ச், 1983
புது டெல்லி விக்ஞான் பவன் அரங்கத்தில் –
அணிசேரா நாடுகளின் ஏழாவது மாநாடு.
NAM தலைவராக இருந்த கியூபாவின் கேஸ்ட்ரோ
தன் பதவியை இந்தியாவிடம் ஒப்படைக்கும் நிகழ்வு.
140 நாடுகளின் பிரதிநிதிகள் திரண்டிருக்கிறார்கள்.
அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கு
NAM பொறுப்பை கைமாற்றுவதன் அடையாளமாக
மரத்தாலான ஒரு கவசத்தை
கேஸ்ட்ரோ அளிக்க வேண்டும்.
அறிவிப்பு செய்தாகிவிட்டது.
கேஸ்ட்ரோ கவசத்தை வழங்கத் தயார் ஆகிறார்.
இந்திரா அதைப் பெற்றுக்கொள்ள கரங்களை நீட்டுகிறார்.
ஆனால் கேஸ்ட்ரோ தராமல்,
கைகளைப் பின்னுக்கிழுத்துக் கொள்கிறார்.
இந்திரா வியப்புடன் பார்க்கிறார்.
கேஸ்ட்ரோ மறுபடியும் கவசத்தை நீட்டுகிறார்.
இந்திரா கைகள் நீட்ட, இம்முறையும் அதைக் கொடுக்காமல்
மீண்டும் கைகளைப் பின்னுக்கிழுத்துக்கொள்கிறார்
கேஸ்ட்ரோ.
சபையில் அமைதி நிலவுகிறது….
பெருங்குரலெடுத்துச் சிரித்த கேஸ்ட்ரோ –
சட்டென்று நெருங்கி, இந்திராவைக் கட்டியணைத்து,
“என் அன்புத் தங்கைக்கு ….”
என்றபடி கவசத்தை வழங்குகிறார்.
அரங்கம் கரவொலியால் அதிர்கிறது.
இந்நிகழ்வு தொடங்குமுன்னர்
ஒரு சின்ன சலசலப்பு.
ஜோர்டான் பிரதிநிதிகள் உரையாற்றியபிறகு –
மதிய அமர்வில் பாலஸ்தீனத்தின் யாஸர் அரஃபாத்
பேசுவதாக ஒழுங்கு செய்திருந்தார்கள்
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.
அரஃபாத்துக்கு மன வருத்தம்.
சின்ன நாடு என்று புறக்கணிக்கிறார்களோ
என்று கடுங்கோபம்.
“நான் பேசமாட்டேன்.
மதியமே ஊருக்குக் கிளம்புகிறேன்!”
சொன்னதோடு நில்லாமல்,
விமான நிலைய அதிகாரிகளிடமும்
பயண ஏற்பாட்டைத் தெரிவித்துவிட்டார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங்
பதறிப்போய் பிரதமர் இந்திராவிடம் ஓடினார்.
இந்திரா கேஸ்ட்ரோவுக்கு போன் செய்தார்.
“கவலையை விடுங்கள் இந்திரா!
அரங்கத்துக்கு வாருங்கள்
பார்த்துக் கொள்ளலாம்! ” என்றார் கேஸ்ட்ரோ.
நிகழ்ச்சிக்கு சற்று முன்னதாகவே –
அரங்குக்கு வந்துவிடும்படி அராஃபத்துக்குத்
தகவல் அனுப்பிவிட்டு, தானும் கிளம்பி
விக்ஞான் பவன் வந்தார்.
அறையில்,
இந்திரா, கேஸ்ட்ரோ, அரஃபாத், நட்வர் சிங் –
நால்வர் மட்டுமே இருந்தனர்.
கேஸ்ட்ரோ : என்ன கோபம் காம்ரேட் அரஃபாத்?
அரஃபாத் : அது….ஒன்றுமில்லை, அது வந்து…
கேஸ்ட்ரோ : சரி, அதை விடுங்கள். இந்திரா உங்களுக்கு யார்?
அரஃ பாத் : என்ன …என்ன கேட்கிறீர்கள் தோழர் ஃபிடெல்?
கேஸ்ட்ரோ : தோழர், புரியவில்லையா?
இதோ நிற்கிறாரே இந்த இந்திராகாந்தி,
இவர் உங்களுக்கு யார் என்று கேட்கிறேன்?
அரஃ பாத் : இதென்ன கேள்வி? இந்திரா என் நண்பர்.
பாலஸ்தீன மக்களின் நண்பர். எல்லாவற்றுக்கும் மேலாக
அவர் என் மூத்த சகோதரி!
கேஸ்ட்ரோ : மூத்த சகோதரிதானே? மாற்றமில்லையே?
நீங்கள் சொல்வது உண்மையானால்,
ஒரு தம்பியைப் போல நடந்துகொள்ளுங்கள்.
மதிய அமர்வில் கலந்துகொண்டு
அப்புறமாகக் கிளம்பிப் போங்கள் !
சட்டென்று அரஃ பாத் சிரித்துவிட,
அந்த இடம் கலகலப்பானது.
மதிய அமர்வில் பேசிவிட்டுதான் புறப்பட்டார்
பாலஸ்தீனத்து யாஸர் அரஃபாத்.
அது – மக்களைக் காப்பதற்காக
கரமிணைத்த தலைவர்களின்
கூட்டணிக் காலம்!
சொல்லவேண்டுமென்று
தோணிற்று!