தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி, உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம், கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், புகளூர் பகுதிகளில் அவர் பிரசாரம் செய்தார்.அப்போது சில பெண்கள், ‘பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் எப்ப தருவீங்க?’ என கேள்வி எழுப்பினர். அதிர்ச்சி அடைந்த உதயநிதி, ”தருவோம்… இன்னும் நாலு வருஷம் இருக்குல்ல…” என, சமாளித்து சென்றார்.
இந்நிலையில், தஞ்சாவூரில் நேற்று உதயநிதி பேசுகையில், ”தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், ஏராளமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இன்னும் பல்வேறு வாக்குறுதிகள் அடுத்தடுத்து நிறைவேற்றப்பட உள்ளன,” என்றார்.
அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு பெண், ‘நகை கடன் வாங்கியிருந்தேன்; எனக்கு தள்ளுபடி ஆகவில்லை’ என்றார்.
உடனே உதயநிதி, ”எந்த வங்கியில், எத்தனை பேர்ல வச்சீங்க; சீட்டு இருந்தா கொடுங்க,” எனக் கேட்டார்.அந்தப் பெண், ‘சீட்டு எடுத்துட்டு வரல’ எனக் கூறியதால், ”என்னம்மா குறை சொல்ற, சீட்ட எடுத்துட்டு வர வேணாமா? உன் பேர் என்ன?” என, உதயநிதி கேட்க, அந்த பெண், ‘தங்கம்’ என்றதும், ”தங்கமே கடன் வாங்கியிருக்கு,” எனக் கூறி சிரித்து, தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.
உடனே, அப்பெண்ணை தி.மு.க.,வினர் அங்கிருந்து வெளியேற்றினர். அடுத்து, வண்டிக்கார தெருவைச் சேர்ந்த கவிதா என்ற பெண், ‘பெற்றோர் இல்லாததால், மூன்று பேரப் பிள்ளைகளை வளர்த்து வருகிறேன். ரொம்ப கஷ்டப்படுறேன். எனக்கு நிதி உதவி செய்ய வேண்டும்’ என்றார்.
அதற்கு உதயநிதி, ”எம்.எல்.ஏ.,விடம் கேளுங்க; உதவி கிடைக்கும்,” எனக் கூறிவிட்டு புறப்பட்டார். போகும் இடங்களில் எல்லாம், தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளை நினைவுபடுத்தி பெண்கள் வறுத்தெடுப்பதால், உதயநிதி அதிர்ச்சியில் உள்ளார்.