(எஸ். ஹமீத்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினரான வீ.சி. இஸ்மாயில் பிரதியமைச்சர் பதவி தனக்குத் தருவதாக இருந்தால் மகிந்த-மைத்திரி தரப்புக்கு ஆதரவு வழங்கத் தான் தயார் என்று கூறி, மகிந்த தரப்பினரைத் தொடர்பு கொண்டுள்ளார். இந்தத் தொடர்பை ஏற்படுத்துவதில் பெரும்பான்மையின அமைச்சர் ஒருவரும் மற்றுமொரு முஸ்லிம் இராஜாங்க அமைச்சரும் செயற்பட்டுள்ளனர்.
ஆனால் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவோ அந்தப் பாராளுமன்ற உறுப்பினரான வீசியை வெகுவாக ஏசி விரட்டிவிட்டதாக நம்பகமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
தற்போது நிகழ்ந்திருக்கும் ஆட்சி மாற்றத்திலோ அல்லது எதிர்கால அரசியல் அரங்கிலோ தமக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினதும் அதன் தலைவரான றிசாத் பதியுதீனினதும் முழுமையான ஒத்துழைப்பு அவசியமென்பதால், இந்தப் பாராளுமன்ற உறுப்பினரின் தனிப்பட்ட ஆதரவை ஏற்கத் தயாரில்லையென்று திட்டவட்டமாக மகிந்த ராஜபக்ஷ கூறி, பின்கதவால் வந்தவரை முன் கதவால் விரட்டிவிட்டிருக்கிறார்.
இந்த விடயமறிந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போராளிகள் வெகுவாகக் கொதித்துப் போயிருக்கின்றனர். சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றுக் கொண்ட இவர் கட்சிக்கும் தலைமைக்கும் சமூகத்திற்கும் இழைக்கவிருந்த துரோகத்தனத்தை சமூக வலைத்தளங்களில் வெகு ஆக்ரோஷமாகவும் ஆவேசமாகவும் கண்டித்து வருகின்றனர்.
பாராளுமன்ற உறுப்பினர் V.C. இஸ்மாயிலைத் தொடர்பு கொள்ள முயன்றபோதும் அவரது அனைத்துத் தொலைபேசிகளும் இயங்கா நிலையிலிருக்கின்றன என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தனது கட்சி உடைந்துவிடக் கூடாது என்பதில் அக்கறையாகச் செயற்பட்ட பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஏதாவதொரு வழியில் பிரதியுபகாரம் செய்யுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!