அதே வேளை இப்படி உருவான நிறுவனங்களிலிருந்து பிரிந்துபோய் தமது சொந்த நிறுவனங்களை உருவாக்கியோரை நாம் இங்கு கணக்கில் எடுக்கவில்லை. பலவிதமான புதிய தொழில் முயற்சிகளுக்கு வித்திடும் கல்லூரிகளும் நிறுவனங்களும் பெருமை சேர்க்கின்றன. இருப்பினும் இந்நிறுவனங்களால் உருவாக்கபடும் திறமைசாலிகள் பிரிந்து சென்று மேலும் புதிய தொழில் முயற்சிகளை உருவாக்குவதே உண்மையான தொடர் இயக்கத்தை ஆரம்பிக்கும்.
அப்போதுதான் இயந்திரமே இயங்க ஆரம்பிக்கிறது. குழுக்கள் மேலும் குழுக்களை ஆரம்பித்து உலக அனுபவமும் அதன் உந்துசக்தியும் இணைந்து சங்கிலித் தொடர் இயக்கமாகப் பரிணமிக்கிறது. இதன் மூலமே நாம் கனவுகண்ட, அந்த சுயநிறைவை எய்தக்கூடிய, தொழில்துறையை வளர்த்துக்கொள்ள முடியும். கலிபோர்ணியாவில், லண்டனில், கொழும்பில் இதைப் பார்த்தோம். யாழ்ப்பாணத்தில் இது இப்போது ஆரம்பிக்கிறது.
தகவல் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் (Information and Communication Technology (ICT)) புதிய தொழில் முயற்சி ஆரம்பத்திற்கு மிகவும் உகந்த ஒரு துறை. இதற்கான நிறுவன ஆரம்பச் செலவுகள் மிகவும் முறைவு. ஒரு மடிக்கணனியையும் இணைய இணைப்பையும் $US 1000 த்திற்குள் பெற்றுவிட முடியும். அம்மாவுடனான உரசல் புரசல்களைச் சமாளிக்க முடியுமாயின் அவரது சாப்பாட்டு மேசையையே அலுவலகமாக்கிவிட முடியும். சந்தைக்குள் வேகமாக நுழைந்துவிடலாம். யாழ்ப்பாணக் கொக்குவில் வீட்டின் ஒரு படுக்கையறை இணையத்தின் மூலம் நியூ யோர்க்கின் வால் ஸ்ட்றீட்டுடன் இலகுவாகத் தொடர்புகொண்டுவிட முடியும்.
மற்றெல்லா துறைகளையும்விட ICT துறைக்கு பெருத்த அனுகூலமிருக்கிறது. கோப்பாய் கிராமத்தில் செய்யப்பட்ட மாங்காய் சட்னி அல்லது கைவினைப் பொருள் சர்வதேச அங்காடிகளின் தட்டுகளில் போய்க் குந்துவதற்கு முன் அது பல நிறுவன முகவர்களின் தட்டு தடங்கல்களையும் விருப்பு வெறுப்புக்களையும் மீறித் தனது மெதுவான பயணத்தை மேற்கொள்ளவேண்டியிருக்கிறது.
ஆனால் ஒரு செயலி (App), அது நல்லதோ கெட்டதோ, ஒரு சர்வதேச பாவனையாளரை இப்பொருட்களுடன் சில விநாடிகளில் இணைத்துவிடுகிறது. இப்படியான எண்ணற்ற செயலிகளை உள்ளடக்கும் தகமையை GooglePlay கொண்டிருக்கிறது. நீங்கள் சட்னியைத் தயாரிப்பவரோ அல்லது செயலியைத் தயாரிப்பவரோ என்பது முக்கியமில்லை. பணம் சம்பாதிப்பது என்பது உங்கள் பண்டத்திலும் (product) சந்தைப்படுத்தும் திறமையிலுமே தங்கியிருக்கிறது.
உலகம் முழுவதிலும் முளைத்த தொழில்நுட்ப முயற்சிகள் (tech startups) ஒரு கடைக்கோ அல்லது ஒரு மருத்துவ மனைக்கோ அல்லது ஏதாவதொரு வியாபார முயற்சிக்கோ தேவையான செயலியை உருவாக்குவதன் மூலமே ஆரம்பித்திருக்கின்றன. முதலாவது முயற்சி எங்கோ இருவரால் அவர்களது படுக்கையறைகளிலேயே கட்டியெழுப்பப்பட்டிருக்கலாம். அதைத் தொடர்ந்து மேலும் பல வாடிக்கையாளர்களுக்கு அது போன்ற சேவைகள் தேவைப்பட்டிருக்கலாம். முதலாவது முயற்சியில் அவர்கள் கணிசமான நேரத்தைச் செலவிட்டு அதன் மூலம் இலாபமே சம்பாதிக்க முடியாமலேயே போயிருக்கலாம். இரண்டாவது முயற்சியில் அவர்களுக்கு அதிக நேரம் செலவிடத் தேவையில்லை. சிறிய மாற்றங்களுடனே அவர்களது தேவைகளைப் பூர்த்திசெய்துவிடுவார்கள்.
ஆனால் இப்போது வாடிக்கையாளர்களிடமிருந்து போதுமான பணத்தை அவர்களால் அறவிட்டுக்கொள்ள முடியும். அதே செயலியை அவர்கள் வேறும் பலருக்கு விற்று அதிக இலாபத்தை ஈட்டுவார்கள். இப்போது அந்த இருவரும் குழுவாக அதிகரிப்பார்கள். அதிக வாடிக்கையாளர்களை நாடுவார்கள். வேறும் பல துறைகளில் அவர்களது சேவைகளை விஸ்தரிப்பார்கள். விரைவிலேயே அவர்களது நிறுவனம் கொடிகட்டிப் பறக்கும். மேலும் சந்தர்ப்பங்களைத் தேடி அவர்கள் ஓடுவார்கள். இதனால் பலருக்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் பெருகும். நிறுவனமும் வளரும். இக்கட்டுரைக்குக் காரணமான Apptimus Tech இப்படித்தான் உருவாகியது.
தக்கன பிழைக்கும் என்ற டார்வினின் தத்துவத்துக்கமைந்ததே தகவல் தொழில்நுட்பத் துறையும். புதிய ஆரம்பங்கள் தோல்வியில் முடிந்தாலும் தோற்றுப்போனவர்களுக்கு அவை நிறைய பாடங்களைக் கற்பிக்கின்றன. அதில் நிச்சயமாக ஒன்று இன்னுமொருதடவை முயற்சித்துப் பார், அல்லது அதில் கற்ற அனுபவத்துடன் இன்னுமொரு ஸ்திரமான நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துவிடு என்பதே.
YGC மூலம் முளைத்தெழுந்த பல நிறுவனங்கள் பற்றி நான் ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். 3 Axis Labs; SenzMate; Arogya Life ஆகியனவே அவை. 2018 இல் நடைபெற்ற YGC யின் 8 ஆவது போட்டியில் வெற்றிபெற்ற ‘ரீம் மஜெண்டா’ வை உருவாக்கிய யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்ட Apptimus Tech நிறுவனம் பற்றிய கட்டுரை அது.
(ஜெகன் அருளையா)