வவுனியா நகர சபையின் முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் தெரிவு நேற்று காலை நடைபெற்றது. இங்கு ஆட்சியைப் பிடிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஐதேகவுக்கும் இடையில் பலத்த போட்டி நிலவி வந்தது.இந்த நிலையில், திடீரென, ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, சிறிலங்கா பொதுஜன முன்னணி, ஈபிடிபி ஆகிய கட்சிகளுடன் இணைந்து, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஈபிஆர்எல்எவ் தமது தரப்பில் முதல்வர் வேட்பாளராக கௌதமனை நிறுத்தியது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் சேனாதிராசா போட்டியில் நிறுத்தப்பட்டார்.இதையடுத்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், கௌதமன் 11 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். சேனாதிராசா 9 வாக்குகளை மாத்திரம் பெற்றார்.
வவுனியா நகரசபையில் 3 ஆசனங்களை மாத்திரம் கொண்டுள்ள ஈபிஆர்எல்எவ்வுக்கு, ஐதேகவின் நான்கு உறுப்பினர்களில் மூவரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 3 உறுப்பினர்களும், ஈபிடிபி, சிறிலங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகளின் தலா 1 உறுப்பினரும் ஆதரவு அளித்தனர்.சேனாதிராஜாவுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 உறுப்பினர்களும், ஐதேகவின் 1 உறுப்பினரும் ஆதரவு அளித்தனர்.
நகரசபைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட ஈபிஆர்எல்எவ் உறுப்பினர் கௌதமன், வட்டார முறையில் வேட்பாளராக நின்று தோல்வியடைந்து பின்னர் விகிதாசாரப் பட்டியல் மூலம், நகரசபை உறுப்பினராக நியமிக்கப்பட்டவராவார்.
இதையடுத்து நடந்த, பிரதி தவிசாளர் தெரிவில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட சு குமாரசாமி 11 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.வடக்கு, கிழக்கில் சிங்களப் பேரினவாதக் கட்சிகள் மற்றும், ஈபிடிபியுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்ததை ஈபிஆர்எல்எவ் கடுமையாக விமர்சித்திருந்தது. தற்போது வவுனியா நகரசபையில், இந்தக் கட்சிகளுடன் இணைந்து ஈபிஆர்எல்எவ் ஆட்சியமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.