கிராமிய பொருளாதார அமைச்சின் கீழ் வவுனியா மாவட்டத்திற்கான பொருளாதார அபிவிருத்தி மையத்தை, வவுனியா தாண்டிக்குளத்தில் அமைப்பதா அல்லது ஓமந்தை நகரில் அமைப்பதா என்று இழுபறியில் இருந்து வந்த பிரச்சினைக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வவுனியாவுக்கு விஜயம் செய்த கிராமிய பொருளாதார அமைச்சர் பி.ஹரிசன் மற்றும் கைத்தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஆகியோர் வடமாகாண முதலமைச்சரின் பிரதிநிகளாக வருகை தந்திருந்த அதிகாரிகள் சகிதம் வவுனியா பொருளாதார அபிவிருத்தி மையத்தை வவுனியா புறநகர்ப்பகுதியில் உள்ள மதகுவைத்தகுளம் மற்றும் வவுனியாவுக்கு வடக்கே மாங்குளம் நகரம் ஆகிய இரண்டு இடங்களில் அமைப்பதற்கான தீர்மானத்தை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
அமைச்சர்களும், அதிகாரிகளும் மதகுவைத்தகுளத்தைப் பார்வையிட்டதுடன் அங்கு உடனடியாக வேலைகளை ஆரம்பிக்குமாறு அதிகாரிகளுக்குப் பணித்துள்ளனர்.
வவுனியா பொருளாதார அபிவிருத்தி மையத்தை தாண்டிக்குளத்திலா அல்லது ஓமந்தையிலா என்று உறுதியாகத் தீர்மானம் எடுக்க முடியாதிருந்த நிலையில், வவுனியா நகரில் ஒன்றும் முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்தில் ஒன்றுமாக இரண்டு நிலையங்களை அமைப்பதென அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது,
வடமாகாண முதலமைச்சரின் ஆலோசனைக்கு ஏற்ப இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் பி.ஹரிசன், செய்தியாளர்களிடம் கூறினார். பொருளதார அபிவிருத்தி மையம் தொடர்பான இந்தக் கலந்துரையாடலில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான் மட்டுமே கலந்து கொண்டார்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களோ, வடமாகாண சபை உறுப்பினர்களோ இதில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.