அதற்கு முன்னோடியாக, தேர்தல்கள் ஆணைக்குழு, அரச அச்சகர், பொலிஸ் மா அதிபர், தபால்மா அதிபர் உள்ளிட்ட பிரதானிகளை, அடுத்தவாரம் சந்தித்து கலந்துரையாடவிருகின்றது. தேர்தல்களுக்கான ஏற்பாடுகள் சூடுபிடிக்கும் நிலையில், போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களுக்கு ஆதரவை திரட்டும் பிரசாரங்களும், வளைத்துப்போடும் செயற்பாடுகளுக்கும் குறைவிருக்காது.
இதில், எதிரணியில் இருக்கும் உறுப்பினர்களை, ஆளும் கட்சிக்கு இழுப்பதற்காக டொலர் கணக்கில் கைமாறும் என்பது, அரசியல் களத்தில் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள், ஆளும் கட்சியில் இணைந்துகொள்ள விருகின்றனர் என, அந்த சக்தியின் உறுப்பினர் ஒருவர், தெரிவித்துள்ளார். டொலர்களை பெற்றுக்கொண்ட அரசியல் விபசாரிகள் என வர்ணித்துள்ளார். எனினும், ஆளும் தரப்பில் இருப்பவர்களை வளைத்துப்போடும் அளவுக்கு எதிர்க்கட்சிகள் வசதிவாய்ப்போடு இருக்கின்றன என நினைப்பது தவறாகும்.
ஆக, எதிர்க்கட்சிகளில் இருந்தே, தனிமரமாக அல்லது தோப்பாக, அரசாங்கத்தின் பக்கத்துக்கு இன்றேல், அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் கட்சிகளில், கூட்டணிகளில் கணிசமான அளவானோர் இணைந்துகொள்வர். எனினும், தங்களுடைய பக்கத்துக்கும் அரசாங்கத்தில் இருந்து பெரும் எண்ணிக்கையிலானோர் வந்து சேரவிருக்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியினர் எதிர்வுகூறியுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தல், இவ்வாண்டு, அதுவும் செப்டம்பர் 16 ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கும் இடையே கட்டாயம் நடைபெறும் என்பது உறுதியாகியுள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தல் களம் சூடுபிடிக்கும். மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் குதிப்பர். அது அவர்களின் ஜனநாயக உரிமையாகும். எனினும், வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க, தேர்தலுக்கான செலவுகள் அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.
ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் தரப்பினர் மக்களுக்கான சலுகைகளை அள்ளிவீசக்கூடும். இதனால், வாக்காளர்களின் மனங்களில் மாற்றங்கள் ஏற்படலாம். எனினும், தேர்தல் சட்டத்தை முறைப்படி கடைப்பிடிக்கவேண்டிய பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே இருக்கிறது என்பதை நினைவுப்படுத்த விரும்புகின்றோம்.
எந்த கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலென்ன, எந்த வேட்பாளராக இருந்தாலென்ன அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்படும் விடயங்களை நன்கு ஆராய்ந்து, அவை நடைமுறைக்கு சாத்தியமாகுமா? என்பது தொடர்பில் அலசி ஆராய்ந்து, தங்களுடைய வாக்குகளை அளிக்கவேண்டும்.
வாக்களிப்பது ஒவ்வொரு பிரஜைகளின் உரிமையாகும் என்பதை வலியுத்தி, வாக்காளர்கள் ஒவ்வொருவரையும் வாக்களிக்கச் செய்யவேண்டும். வாக்குரிமையை பயன்படுத்துவதே புத்திசாலித்தனமாகும். இல்லையேல், நாட்டுக்கு தேவையே இல்லாத ஒருவர், ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்துவிடுவார். இது நாட்டின் எதிர்காலத்துக்கு பெரும் ஆபத்தாகவே முடியும் என்பதை கடந்தகால படிப்பினைகளை கொண்டு அறிவுறுத்துகின்றோம்