புதிய அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமருக்கு நிறைவேற்று அதிகாரம் செல் வதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு இச்சபையில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் கிடைக்காதென பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றுவது குறித்த பிரேரணை மீதான விவாதத்தில் நேற்று புதன்கிழமை கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதா? தற்போது காணப்படும் அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதா? என்பது தொடர்பில் வேறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியும் தற்போது காணப்படும் அரசியலமைப்பில் சில மாற்றங்களை மேற்கொள்வதற்கே இணக்கப்பாடுகளை எட்டியிருந்தன.
எனினும் தற்போது அந்த நிலைமைகளில் குழப்ப நிலைமைகளும் காணப்படுகின்றன. அவ்வாறிருக்கையில் புதிய அரசியலமைப்பின் ஊடாக ஜனாதிபதிக்கு காணப்படும் நிறைவேற்று அதிகாரங்களை நீக்கி அந்த அதிகாரங்களை பிரதமருக்கு வழங்கும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையிலான செயற்பாடுகளை நாம் முற்றாக எதிர்பார்க்கின்றோம். பாராளுமன்றத்துக்கு அதிகாரங்களை பகிர்வதாக கூறி அவ்வதிகாரங்களை பிரதமர் எடுத்துக்கொள்வதை அனுமதிக்க முடியாது. அவ்வாறான நடவடிக்கை தொடர்பாக பாராளுமன்றில் கொண்டுவரப்படும் சட்ட மூலத்திற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் ஒருபோதும் கிடைக்காது என்றார்.